தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக44 ஆயிரத்து 684 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 4-வது நாளாக, கொரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
புதுடெல்லி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக44 ஆயிரத்து 684 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 87 லட்சத்து 73 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 520 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 188 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் உயிரிழப்பு 1.47 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கொரோனாவ பாதிப்புக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்து 714 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5.48 சதவீதமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 4-வது நாளாக, கொரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 12 கோடியே 40 லட்சத்து 31 ஆயிரத்து 230 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 9 லட்சத்து 29 ஆயிரத்து 491 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கொரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது. செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தைக் கடந்துள்ளது.