நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் 6 சொத்துகள் ஏலம் எடுக்கப்பட்டன
மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் 6 சொத்துகள் இன்று ஏலம் எடுக்கப்பட்டன.
புனே,
மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் அவர் பாகிஸ்தானுக்கு தப்பியோடி விட்டார். அவரை நாடு கடத்தும் பணியில் அரசு ஈடுபட்டு உள்ளது.
இந்த நிலையில், மராட்டியத்தின் ரத்னகிரியில் உள்ள அவரது பூர்வீக இடத்தில் மற்றும் கோரிகாவன் பகுதியில் உள்ள சொத்துகளை ஏலம் விடுவது என சபீமா (கடத்தல்காரர்கள் மற்றும் அந்நிய செலாவணி மோசடி நபர்கள் தடுப்பு அமைப்பு) முடிவு செய்தது.
இதன்படி இப்ராகிமின் 6 சொத்துகள் காணொலி வழியே ஏலம் விடப்பட்டன. அவற்றில் 4 சொத்துகளை டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் ஏலம் எடுத்துள்ளார். மற்ற 2 சொத்துகளை மற்றொரு வழக்கறிஞர் ஏலம் எடுத்துள்ளார்.
இவற்றில் ரூ.1.89 லட்சம் மற்றும் ரூ.5.35 லட்சம் இருப்பு தொகை கொண்ட இரு சொத்துகள் அதிக அளவாக முறையே ரூ.4.3 லட்சம் மற்றும் ரூ.11.2 லட்சம் மதிப்புக்கு ஏலம் எடுக்கப்பட்டன. மற்ற சொத்துகள் அடிப்படை விலைக்கே ஏலத்திற்கு எடுக்கப்பட்டன.
எனினும், இக்பால் மிர்ச்சி என்ற மற்றொரு தாதாவின் மில்டன் குடியிருப்பு பற்றி பல்வேறு விசாரணைகள் நடந்து வரும் சூழலில் அதனை ஏலம் எடுக்க யாரும் வரவில்லை.