உத்தர பிரதேச முக்கிய நகரங்களில் டிசம்பர் 1ந்தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை

உத்தர பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் இன்று நள்ளிரவு முதல் வருகிற டிசம்பர் 1ந்தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

Update: 2020-11-10 10:32 GMT
லக்னோ,

நாடு முழுவதும் கொரோனா வைரசின் பாதிப்புகள் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.  காற்று மாசுபாட்டால் பாதிப்புகள் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.  டெல்லியில் ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் காற்று மாசு தர குறியீடு அதிகரித்து உள்ளது.  நகரங்களில் காலை வேளையில் பனி அடர்ந்து தெளிவற்ற வானிலையும் காணப்படுகிறது.

இந்த சூழலில், தீபாவளி பண்டிகை தினத்தில் பட்டாசுகளை தவிர்த்து மண் விளக்குகளை ஏற்றுங்கள் என பொதுமக்களிடம் முதல் மந்திரி கெஜ்ரிவால் கேட்டு கொண்டார்.  ராஜஸ்தான், மணிப்பூர், கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.  அந்நகரங்களில் அனைத்து வகை பட்டாசுகளையும் இன்று நள்ளிரவு முதல் டிசம்பர் 1ந்தேதி அதிகாலை வரை விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது என அரசு அறிவித்து உள்ளது.

இதன்படி, காற்று மாசு அதிகமுள்ள நகரங்களாக அறியப்படும் தலைநகர் லக்னோ, முசாபர்நகர், ஆக்ரா, வாரணாசி, மீரட், ஹப்பூர், காசியாபாத், கான்பூர், மொராதாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா, பாக்பத் மற்றும் புலந்த்சாகர் ஆகிய நகரங்களில் பட்டாசுகளுக்கு இன்று முதல் தடை அமலாகிறது.

இதேபோன்று காற்றின் தரம் மித அளவிலான அல்லது சிறந்த முறையில் உள்ள மாவட்டங்களில் பசுமை பட்டாசுகளுக்கு மட்டும் விற்பனை மற்றும் பயன்படுத்துதலுக்கு உத்தர பிரதேச அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்