பீகார் தேர்தல் முன்னிலை நிலவரம்: தேசிய ஜனநாயக கூட்டணி- மெகா கூட்டணி இடையே கடும் போட்டி
பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடந்து வருகிறது. துவக்க கட்ட முன்னிலை விவரங்களில் என்டிஏ- ஆர்ஜேடி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பாட்னா,
243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் பிரதானமாக களத்தில் இருந்தன.
இதைத்தவிர ராஷ்டிரீய லோக் சமதா கட்சி தலைமையில் மற்றொரு அணியும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்த ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனியாகவும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
38 மாவட்டங்களில் 55 இடங்களில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி 99 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் மெகா கூட்டணி 102 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. முன்னிலை நிலவரங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால் நிதிஷ் குமார் - தேஜஸ்வி யாதவ் இடையே கடும் போட்டி நிலவும் எனத்தெரிகிறது.