தீபாவளி பண்டிகைக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள் - பிரதமர் மோடி அழைப்பு

தீபாவளியை முன்னிட்டு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2020-11-10 00:59 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடி நேற்று உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசியில் ரூ.614 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் வைத்தார். காணொலி காட்சி மூலம் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீபாவளி பண்டிகைக்கு அனைவரும் உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள். ‘தீபாவளிக்கு உள்நாட்டு பொருட்கள்’ என்ற இந்த கோஷம் எங்கும் எதிரொலிக்க வேண்டும். உள்நாட்டு பொருட்கள் வாங்குவதால், உள்நாட்டு அடையாளம் வலுப்படுவதுடன், அப்பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு தீபாவளி ஒளிமயமாகும்.

உள்நாட்டு பொருட்களுடன் தீபாவளி கொண்டாடும்போது, பொருளாதாரமும் வலுவடையும். எனவே, பெருமையுடன் உள்நாட்டு பொருட்களை வாங்குங்கள் என்று வாரணாசி மக்களையும், நாட்டு மக்களையும் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொருவரும் உள்நாட்டு பொருட்களை வாங்கும்போது, அவை நன்றாக இருப்பதாக மற்றவர்களிடம் சொல்லுங்கள். அதன்மூலம் இந்த செய்தி பரவும்.

வெறும் விளக்கு மட்டுமல்ல, தீபாவளிக்கு என்னென்ன பொருட்களை பயன்படுத்துவீர்களோ, அவற்றை உள்நாட்டு பொருட்களாக வாங்கினால், அவற்றை தயாரிப்பவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அதற்காக ஏற்கனவே உள்ள பொருட்களை கங்கை ஆற்றில் வீசி எறிய வேண்டும் என்று அர்த்தம் அல்ல.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள், விவசாயிகளை சந்தையுடன் நேரடியாக இணைக்கும். இடைத்தரகர்களை அப்புறப்படுத்தும். கிழக்கு உத்தரபிரதேச விவசாயிகளும் பலன் அடைவார்கள். விவசாயிகளுக்கு சொத்து விவர அட்டை வழங்குவது உள்பட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மேலும் செய்திகள்