இந்திய-சீன எல்லையில் படைகள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள பேச்சுவார்த்தையில் முடிவு
இந்திய-சீன எல்லையில் இரு நாட்டு படைகளும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது என பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக இரு நாடுகளும் கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளன.
புதுடெல்லி,
கிழக்கு லடாக்கில் இந்திய எல்லைக்குள் சீன படைகள் அத்துமீற முயன்றதால் ஏற்பட்ட மோதல் மற்றும் உயிரிழப்புகளால் கடந்த மே மாதம் முதல் இரு நாட்டு எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாடுகளும் தலா 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களையும், ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களையும் குவித்து வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றன. இந்த மோதலை தடுத்து பதற்றத்தை தணிப்பதற்கு இரு தரப்பிலும் தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. குறிப்பாக ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் வரை 7 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 8-வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த 6-ந்தேதி நடந்தது. லடாக்கின் சுசுல் பகுதியில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இந்திய தரப்புக்கு 14-வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே. மேனன் தலைமை தாங்கினார். வெளியுறவுத்துறை அதிகாரி நவீன் ஸ்ரீவத்சவாவும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.
காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை இரவு 7 மணிக்கு முடிவடைந்தது. இந்த சந்திப்பின்போது எல்லையில் இருதரப்பும் படைகளை விலக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டன. குறிப்பாக அங்கு சர்ச்சைக்குரிய பகுதிகள் அனைத்தில் இருந்தும் படைகளை வாபஸ் பெறுமாறு இந்தியா வலியுறுத்தியது.
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து நேற்று இந்தியா-சீனா சார்பில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ‘இந்தியா-சீனா இடையே மேற்கு செக்டாரில், அசல் எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக இருதரப்பும் நேர்மையான, ஆழமான மற்றும் ஆக்கபூர்வமான முறையில் கருத்துகளை பரிமாறிக்கொண்டன. இரு நாட்டு தலைவர்களுக்கு இடையே எட்டப்பட்டு இருந்த ஒருமித்த முடிவுகளை ஆர்வமாக அமல்படுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டன. மேலும் எல்லையில் எந்தவித தவறான புரிந்துணர்வு, தவறான கணக்கீடுகள் ஏற்படுவதை தவிர்க்கவும், தங்கள் முன்கள படையினர் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதை உறுதி செய்யவும் இருநாடுகளும் ஒப்புக்கொண்டன’ என்று கூறப்பட்டு உள்ளது.
இதைப்போல ராணுவம் மற்றும் தூதரகம் வழியாக பேச்சுவார்த்தைகளை தொடர இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாகவும், மேற்படி கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விவாதங்களை முன்னெடுத்துச் சென்று நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பராமரிக்கவும் முடிவு செய்ததாகவும் அந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அந்தவகையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 8-வது சுற்று பேச்சுவார்த்தையில், எல்லையில் இருந்து படைகளை விலக்குவது குறித்து முக்கியமாக பேசப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் உறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை என தெரிகிறது.