சீனாவுடனான 8-வது கட்ட பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்தது - இந்தியா
சீனாவுடனான 8-வது கட்ட பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது என இந்தியா தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
லடாக்கில் கடந்த மே மாதம் சீனப்படைகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றதால் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஜூன் மாதம் நிகழ்ந்த கைகலப்பில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதமும் நிகழ்ந்தன. இதைத் தொடர்ந்தும் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீற முயன்றதால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்த பதற்றத்தை தணித்து மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் அடிக்கடி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
எல்லையில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் இந்த அமைதி பேச்சுவார்த்தைகளை, குறிப்பாக படைகளை திரும்ப பெறுவது குறித்த பேச்சுவார்த்தைகளை தொடர்வது என இருதரப்பும் முடிவு செய்துள்ளன.
அந்த வகையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான 8-வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த 6 ஆம் தேதி நடந்தது. இந்த பேச்சுவார்த்தை கிழக்கு லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு அருகே உள்ள இந்திய பகுதியான சுசுல் என்ற இடத்தில் நடந்தது.
இந்த 8-வது சுற்று பேச்சுவார்த்தையில் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை விலக்குவது குறித்தும், இதற்கான செயல்திட்டத்தை வகுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், பேச்சுவார்த்தை குறித்து மத்திய அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில், “ இந்தியா - சீனா இடையேயான 8-வது கட்ட பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஆகவே, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.