ஆந்திர பல்கலைக்கழக மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்க உயர்கல்வித்துறை அறிவுறுத்தல்
ஆந்திராவில் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யுமாறு அரசு பல்கலைக்கழகங்களிடம் உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஐதராபாத்,
ஆந்திர மாநில சிறப்பு தலைமைச் செயலாளர் சதீஷ் சந்திரா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆந்திர கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து தீர்வு காண, கல்லூரி வளாகத்தில் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்பட வேண்டும் என்று அரசு பல்கலைக்கழகங்களிடம் மாநில உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சதீஷ் சந்திரா கூறுகையில், “கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு காரணமாக மாணவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்த பயத்தில் உள்ளனர். இதனால் சிலர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனை தடுக்கும் விதமாக அவர்களுக்கு கல்லூரி வளாகங்களிலேயே மனநல ஆலோசனைகள் வழங்க அறிவுறுத்தியுள்ளோம்.
உடல்நலத்தைப் போல மனநலமும் மிக முக்கியமானது என்பதால், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அறிவுறுத்தலின்படி மாணவர்கள் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களின் எதிர்காலம் எந்த வகையிலும் பாதிப்பு அடையாது என்பதை மாணவர்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.