சசிகலா சிறை தண்டனை குறித்த தகவல்களை வழங்க தகவல் ஆணைய அதிகாரி உத்தரவு

சசிகலா சிறை தண்டனை குறித்த தகவல்களை வழங்க வேண்டும் என்று பெங்களூரு சிறைத்துறைக்கு, தகவல் ஆணைய அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-11-05 01:31 GMT
பெங்களூரு, 

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. இந்த நிலையில் கைதிகளுக்கு வழங்கப்படும் சலுகை அடிப்படையில் விடுமுறை காலத்தை கழித்தால், சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்று தகவல்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு இந்த விடுமுறை நாட்கள் சலுகை கிடையாது என்று சிறை நிர்வாகம் கூறுகிறது. ஆனால் சசிகலாவின் வக்கீல், சசிகலாவுக்கு விடுமுறை நாட்கள் உண்டு என்றும், அவர் முன்கூட்டியே விடுதலை ஆவது உறுதி என்றும் கூறி வருகிறார். இதனால் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்தபடி உள்ளது. தமிழக அரசியலில் குறிப்பாக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2021) நடைபெற உள்ள நிலையில் சசிகலாவின் வருகை முக்கியத்துவம் பெறும் என்பதால், அவரது விடுதலை அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.

இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலாவின் தண்டனை, விடுதலை குறித்த விவரங்களை அவ்வப்போது சிறை நிர்வாகத்திடம் கேட்டு பெற்று வருகிறார். இந்த நிலையில் டி.நரசிம்மமூர்த்தி, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலாவுக்கு எத்தனை விடுமுறை நாட்கள் கிடைக்கும் என்பது குறித்த தகவலை வழங்குமாறு கேட்டு பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் கடிதம் வழங்கினார்.

அதற்கு பதிலளித்த அந்த சிறை நிர்வாகம், சசிகலா தன்னை பற்றிய தகவல்களை 3-வது நபருக்கு வழங்குவது சட்டவிரோதம் என்று கூறி இருப்பதாகவும், அதனால் 3-வது நபருக்கு தனது சம்பந்தப்பட்ட விவரங்களை வழங்கக்கூடாது என்றும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அதனால் நீங்கள் கேட்ட விவரங்களை வழங்க முடியாது என்று சிறை நிர்வாகம் கூறியது. இந்த நிலையில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகத்தின் பதிலை எதிர்த்து, தகவல் ஆணைய அதிகாரியிடம் நரசிம்மமூர்த்தி மேல்முறையீடு செய்தார்.

இதையடுத்து சசிகலாவின் தண்டனை தொடர்பான விவரங்கள் பொதுவானவை என்பதால், அந்த விவரங்களை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்க வேண்டும் என்று சிறைத்துறைக்கு தகவல் ஆணைய அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தனது விடுதலை குறித்த விவரங்களை 3-வது நபருக்கு வழங்கக்கூடாது என்ற சசிகலாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டி.நரசிம்மமூர்த்தி கூறுகையில், “சசிகலா தண்டனை குறித்த விவரங்கள், தகவல்களை வழங்க வேண்டும் என்று தகவல் ஆணைய அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அவரது தனிப்பட்ட தகவல்களை நான் கேட்கவில்லை. அவரது தண்டனை குறித்த விவரங்கள் பொதுவானவை. மேலும் சசிகலாவுக்கு ஒரு நாள் கூட விடுமுறை நாட்கள் சலுகை கிடையாது. அவர் ஏற்கனவே சிறை நிர்வாகம் கூறியபடி அடுத்த ஆண்டு ஜனவரி 27-ந் தேதி தான் விடுதலை ஆவார். அபராதத்தொகை செலுத்தாவிட்டால் மேலும் ஒரு ஆண்டு சிறையில் அவர் இருக்க வேண்டும்“ என்றார்.

மேலும் செய்திகள்