நிதிஷ் குமார் பேசிக்கொண்டிருந்த மேடையை நோக்கி வெங்காயம் வீசப்பட்டதால் பரபரப்பு

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது

Update: 2020-11-03 12:31 GMT
பாட்னா,

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் அக்டோபர் 28 நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் இன்று (நவம்பர் 3) நடைபெற்று வருகிறது. மேலும், இறுதிகட்ட தேர்தல் நவம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது.
 
இந்த தேர்தலில் முதல்மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா இணைந்த கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி இணைந்த மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.இதேபோல் ஆளும் என்டிஏ கூட்டணியில் இருந்து பிரிந்த லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது. ஆனாலும் பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கிறது. 

இதற்கிடையில், 3-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு நட்சத்திர பேச்சாளர்களும் தங்கள் கூட்டணிக்கு ஆதரவாக வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில், பீகாரின் மதுபானி என்ற இடத்தில் நிதிஷ் குமார் பிரசாரத்தில் ஈடுபட்டார். வேலை வாய்ப்பு தொடர்பாக நிதிஷ் குமார் பேசிக்கொண்டிருக்கும் போது, அவர் நின்று கொண்டிருந்த மேடையை நோக்கி வெங்காயம் வீசப்பட்டது. உடனே  நிதிஷ்குமாரின் பாதுகாவலர்கள் அவரை சூழந்து கொண்டனர்.

அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் வெங்காயம் வீசிய நபரை பிடித்தனர். ஆனால், அந்த நபரை விட்டு விடுங்கள், அவர் மீது எந்த கவனத்தையும் செலுத்த வேண்டாம்” என நிதிஷ் குமார் கூறினார். 

மேலும் செய்திகள்