காஷ்மீரிகளை கொல்ல பாகிஸ்தான் ஆதரவு ஹிஜ்புல் பயங்கரவாதிகளுக்கு ஓய்வில்லா பணி; அதிர்ச்சி தகவல்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் மக்களை கொல்வதற்காக பாகிஸ்தான் ஆதரவு ஹிஜ்புல் பயங்கரவாதிகளுக்கு ஓய்வில்லா பணி வழங்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவின் காஷ்மீரை சுற்றிய எல்லை பகுதிகளில் காவல் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களுக்கு பல்வேறு வழிகளில் இருந்தும் சோதனைகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஒருபுறம் அவர்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி நடத்தப்படும் பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றனர். மறுபுறம் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கங்களின் ஊடுருவல்காரர்களை எதிர்த்து போரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு மற்றும் பாகிஸ்தான் ராணுவம் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஹிஜ்புல் பயங்கரவாதிகள் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள், ஓய்வின்றி செயல்பட பணி வழங்கப்பட்டு உள்ளது.
இதுதவிர ஜம்மு மற்றும் காஷ்மீரில் வாழும் உள்ளூர் மக்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதேபோன்று பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றான லஷ்கர் இ தொய்பாவுக்கு, இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
காஷ்மீரில் அமைதியை முடங்க செய்யவும், போலீசார் மற்றும் அரசியல்வாதிகளை படுகொலை செய்யும் பணியை ஹிஜ்புல் பயங்கரவாதிகள் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு உள்ளது என உளவு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் தெரிய வந்துள்ளது.
இதனால், பாகிஸ்தான் தரப்பில் இருந்து மும்முனை தாக்குதலை நேரடியாக எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு இந்திய பாதுகாப்பு படையினருக்கு ஏற்பட்டு உள்ளது.