சபரிமலை கோவிலில் மண்டல, மகரவிளக்கு தரிசனத்துக்கு ஒரே நாளில் முன்பதிவு முடிவடைந்தது
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சாமி தரிசனத்துக்கு ஆன்லைன் முன் பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே முடிவடைந்தது.
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜையை காண ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஐப்பசி மாத பூஜைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன், வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக முந்தைய நாளான 15-ந் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் மாதம் 26-ந்தேதியும், மகர விளக்கு பூஜை 2021 ஜனவரி 14-ந் தேதியும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி பக்தர்கள் சாமியை தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன் பதிவு நேற்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே சீசன் முழுமைக்குமான தரிசன முன் பதிவு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என அய்யப்ப பக்தர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.