புல்வாமா தாக்குதல்; வீரர்கள் உயிர்த்தியாகம் பற்றி அரசியல் செய்தவர்களை நாடு மறக்காது: பிரதமர் மோடி

புல்வாமா தாக்குதலில் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தபொழுது, அதுபற்றி அரசியல் செய்தவர்களை நாடு ஒருபோதும் மறக்காது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2020-10-31 06:24 GMT
கெவாடியா,

ஒன்றுபட்ட வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.  இதனை முன்னிட்டு குஜராத்தின் கெவாடியா நகரில் வடிவமைக்கப்பட்டு உள்ள ஒற்றுமைக்கான சிலை மீது பிரதமர் மோடி பால் ஊற்றி, மலர்களை தூவி மரியாதை செலுத்தி வணங்கினார்.

இதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கலை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் ஆகியவை தொடங்கி நடந்தன. பின்பு, பாதுகாப்பு படை வீரர்களின் ராணுவ அணிவகுப்பு நடந்தது.  இதனை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

இதன்பின்னர் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றும்பொழுது, உலகிலுள்ள அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய தருணமிது.  பயங்கரவாதம் மற்றும் வன்முறை ஆகியவற்றால் ஒருவரும் பலனடைய முடியாது.

இந்தியா எப்பொழுதும் பயங்கரவாதத்திற்கு எதிராகவே போராடி வருகிறது.  புல்வாமா தாக்குதலில் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தபொழுது, சிலர் அதற்காக வருத்தப்படவில்லை.  இதனை ஒருபோதும் நாடு மறக்காது.  அந்த நேரத்தில் இந்த நபர்கள் அரசியல் செய்து கொண்டு இருந்தனர்.  இதுபோன்ற அரசியலை செய்ய வேண்டாம் என்று நாட்டின் நலனுக்காக நான் வேண்டி கேட்டு கொள்கிறேன்.

நாடாளுமன்றத்தில் அண்டை நாட்டுக்காக உண்மையானது (இந்தியாவில் புல்வாமா தாக்குதல் பற்றியது) ஒப்பு கொள்ளப்பட்ட விதம், இந்த சம்பவத்தில் அரசியல் செய்தவர்களின் உண்மை முகம் வெளிப்படும் வகையில் அமைந்தது என்று வேதனையுடன் குறிப்பிட்டு பேசினார்.

மேலும் செய்திகள்