கொரோனாவுக்கு எதிரான போர்; கூட்டு ஆற்றலை நிரூபித்த நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் கூட்டு ஆற்றலை நிரூபித்த நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.
புதுடெல்லி,
இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு குஜராத்தின் கெவாடியா நகரில் வடிவமைக்கப்பட்டு உள்ள ஒற்றுமைக்கான சிலை மீது பிரதமர் மோடி பால் ஊற்றி, மலர்களை தூவி மரியாதை செலுத்தி வணங்கினார். இதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் தொடங்கி நடந்தன.
இதனை தொடர்ந்து, பாதுகாப்பு படை வீரர்களின் ராணுவ அணிவகுப்பு நடந்தது. இதனை பிரதமர் மோடி பார்வையிட்டார். இதன்பின்னர் அவர் உரையாற்றும்பொழுது, சுற்றுலாவை இந்த பகுதியில் ஊக்குவிக்கும் வகையில் சபர்மதி ஆற்றங்கரையில் இருந்து கெவாடியா வரை கடல் வானூர்தி சேவை தொடங்கி வைக்கப்படும்.
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட போராளிகளை 130 கோடி இந்தியர்களும் ஒன்றாக கவுரவித்தனர். இந்நேரத்தில் கூட்டு ஆற்றலை நாடு நிரூபித்த விதம் இதற்கு முன் நடந்திராத ஒன்றாகும்.
காஷ்மீர் இன்று, வளர்ச்சிக்கான புதிய பாதையில் பயணிக்கிறது. வடகிழக்கில் மீண்டும் அமைதியை கொண்டு வருவதில் ஆகட்டும், அல்லது அங்கே வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஆகட்டும் ஒற்றுமைக்கான புதிய பரிமாணங்களை நாடு நிலைநாட்டியுள்ளது என கூறினார்.