ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள்,கல்லூரிகள் திறப்பு

ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில தலைமை செயலாளர் நீலம் சாஹ்னி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2020-10-29 21:17 GMT
ஐதராபாத்,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஜூன் மாதம் முதல் தளர்வுகளை அறிவித்து வரும் மத்திய அரசு, கடந்த மாதம் முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளித்தது. எனினும் இவ்விவகாரத்தில் மாநில அரசுகள் இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. இதனால் பல மாநிலங்கள் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசித்து வருகின்றன.
 
இதற்கிடையே, ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில தலைமை செயலாளர் நீலம் சாஹ்னி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 2 ஆம் தேதியும், 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 23 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும்,  1, 2, 3, 4 மற்றும் 5-ம் வகுப்புகள் டிசம்பர் 14 முதல் தொடங்கும் என்றும்,

பள்ளிகள் ஒருநாள் விட்டு ஒருநாள் மற்றும் பள்ளி வேலையானது அரை நாள் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தத் திட்டம் நவம்பர் மாதத்திற்கு மட்டுமே அமலில் இருக்கும். அதன்பிறகு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு டிசம்பரில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்துப் புதிய அறிவிப்பு வெளியாகும். அதே நேரத்தில் கொரோனா அச்சம் காரணமாகப் பள்ளிக்கு வர விரும்பாத மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறும்' என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்