காஷ்மீரில் பாஜக நிர்வாகிகள் 3 பேரை சுட்டுக்கொன்று பயங்கரவாதிகள் தப்பி ஓட்டம்

காஷ்மீரில் பாஜக நிர்வாகிகள் 3 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.

Update: 2020-10-29 18:43 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் குல்ஹம் மாவட்டம் ஒய்கே பூரா பகுதியை சேர்ந்த உமர் ரஷித் பேக் குல்ஹம் மாவட்ட பாஜக கட்சியின் இளைஞரணி பொதுச்செயலாளராக உள்ளார். 

அதேபோல் அப்பகுதியை சேர்ந்த உமர் ரம்சன் ஹஜீம் மற்றும் பிடா ஹசன் யாதூ ஆகிய இருவரும் மாவட்ட பாஜக நிர்வாகிகளாக இருந்து வந்தனர்.

இந்நிலையில், பாஜக நிர்வாகிகள் 3 பேரும் இன்று இரவு 8 மணியளவில் ஒய்கே பூரா பகுதியில் ஒரு காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற காரை இடைமறித்த பயங்கரவாதிகள் பாஜக நிர்வாகிகள் மீது சரமாறியாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடந்த பகுதிக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த பாஜக நிர்வாகிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்தவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தாக்குதல் நடந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர், தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை தேடும்பணியில் பாதுகாப்பு படையில் ஈடுபட்டுள்ளனர்.

காஷ்மீரில் பாஜக நிர்வாகிகள் 3 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்