போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற கட்சி தொண்டர்களால் பரபரப்பு
தெலுங்கானாவில் சோதனை செய்த இடத்தில் போலீசார் பறிமுதல் செய்த பணத்தில் ரூ.12 லட்சம் கட்சி தொண்டர்களால் பறிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் தப்பக் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், அந்த தொகுதிக்கான பா.ஜ.க. வேட்பாளராக ரகுநந்தன் ராவ் போட்டியிடுகிறார்.
அவருக்கு சொந்தமான 3 இடங்களில் சித்திபேட்டை போலீஸ் கமிஷனர் டேவிஸ் தலைமையிலான போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இதில் ரூ.18.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் சோதனை பற்றிய தகவல் அறிந்த அக்கட்சியின் தொண்டர்கள் அந்த பகுதியில் ஒன்று கூடினர்.
அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இந்நிலையில், போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் தொகையை கட்சி தொண்டர்களில் சிலர் பறித்து கொண்டு தப்பியோடினர்.
சோதனை செய்ய வந்த இடத்தில் கைப்பற்றிய பணத்தில் இருந்து ஒரு தொகையை போலீசாரிடம் இருந்தே தொண்டர்கள் பறித்து சென்றது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.