அரசுகளை கவிழ்ப்பதற்கு பதில் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படுத்துங்கள்; உத்தவ் தாக்கரே பேச்சு
நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதில் அரசுகளை கவிழ்ப்பதில் பா.ஜ.க. தொடர்ந்து ஆர்வமுடன் உள்ளது என மராட்டிய முதல் மந்திரி கூறியுள்ளார்.
புனே,
மராட்டியத்தின் மும்பை நகரில் தசராவை முன்னிட்டு சிவசேனா கட்சியின் வருடாந்திர பேரணி இன்று நடந்தது. இதில் மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் பேசிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, நாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான பணிகளை செய்வதனை விட்டு விட்டு, அரசுகளை கவிழ்க்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதில் அரசுகளை கவிழ்ப்பதில் பா.ஜ.க. தொடர்ந்து ஆர்வமுடன் உள்ளது.
நாம் அராஜக அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு சிவசேனா பேராசைப்படவில்லை என கூறிய அவர், தனது 11 மாத கால அரசை முடிந்தால் கவிழ்த்து பாருங்கள் என பா.ஜ.க.வுக்கு சவால் விடுத்து பேசினார். முதலில் மத்தியில் உள்ள உங்கள் அரசை பாதுகாத்திடுங்கள் என்றும் அவர் கேட்டு கொண்டார்.
இதற்கு முன்பிருந்த ஆட்சி கவிழ்ப்பு விசயங்களில் வேறு மாற்று காரணிகள் இல்லை என்ற சூழலில், உங்களை தவிர வேறு யாரும் இதனை செய்திருக்க முடியாது என மக்கள் யோசிக்க தொடங்கி விட்டனர் என பிரதமர் மோடியை பெயர் குறிப்பிடாமல் கூறினார்.
நாடு தொற்று வியாதியை சந்தித்து வரும் சூழலில், எப்படி ஒருவர் அரசியல் செய்ய முடியும்? சிவசேனாவின் இந்துத்துவா பற்றி கேள்வி எழுப்பப்படுகிறது. மராட்டிய அரசு மற்றும் மும்பை போலீசார் இகழப்படுகின்றனர்.
மராட்டிய வெறுப்புணர்வாளர்கள் மராட்டிய மாநிலத்தின் புகழை கெடுப்பதற்கு எந்த ஒரு செயலையும் விட்டு வைக்கவில்லை என்று கூறியுள்ளார்.