நீதிபதிகள், முடிவுகளில் உறுதியாக இருக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரமணா பேச்சு

“நீதிபதிகள் முடிவுகளில் உறுதியாக இருக்க வேண்டும்” என்று நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் இரங்கல் கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதி என்.வி.ரமணா கூறினார்.

Update: 2020-10-18 23:25 GMT
புதுடெல்லி, 

தமிழகத்தை சேர்ந்தவர் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன். சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாகவும், ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாகவும் விளங்கியவர். 2007-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவியை நிறைவு செய்த பின்னர், 18-வது சட்ட கமிஷன் தலைவராகவும் இருந்தார். சமீபத்தில் உடல்நல குறைவால் காலமானார்.

அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதி என்.வி.ரமணா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாம் அனைவரும், மறைந்த நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் வார்த்தைகளில் இருந்து உத்வேகம் பெற வேண்டும். தற்போதைய காலத்தில் தேவைப்படுகிற ஒரு துடிப்பான மற்றும் சுதந்திரமான நீதித்துறையை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.

நீதிபதி லட்சுமணன், நாட்டில் தலைசிறந்த நீதிபதிகளில் ஒருவராக திகழ்வதற்கு தேவையான அனைத்து குணங்களையும் கொண்டிருந்தார்.

நமது மதிப்புதான், இறுதியில் நமக்கு மிகப்பெரிய செல்வம். நாம் இதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. நீதிபதி லட்சுமணன், ஒரு நல்ல மனிதர். ஒரு நல்ல மனிதராகவும், நீதிபதியாகவும் திகழ்வது எப்படி என்பதை நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.

நீதித்துறையின் மிகப்பெரிய பலம், மக்கள் அதன்மீது வைத்துள்ள நம்பிக்கை. மற்றவர்கள் நம்பிக்கை கொள்வதையும், ஏற்றுக்கொள்ள வைப்பதையும் நாம் கட்டளையிட முடியாது. அவை சம்பாதிக்கப்பட வேண்டும்.

ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு எண்ணற்ற குணங்கள் உள்ளன. பணிவு, பொறுமை, இரக்கம், ஒரு வலுவான பணிநெறிமுறை, தொடர்ந்து கற்றுக்கொள்ளவும் மேம்படுத்திக்கொள்வதற்குமான உற்சாகம் என அவை நீளுகின்றன.

மிக முக்கியமாக குறிப்பாக ஒரு நீதிபதி, தனது கொள்கைகளை கடைப்பிடிப்பதில் உறுதியுடன் இருக்க வேண்டும். அவர்கள் முடிவுகளில் பயமின்றி இருக்க வேண்டும். ஒரு நீதிபதி அனைத்து அழுத்தங்களையும், முரண்பாடுகளையும் தாங்கி, அனைத்து தடைகளுக்கும் எதிராக துணிச்சலுடன் எழுந்து நிற்பது மிக முக்கியமான பண்பு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அண்மையில் ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, நீதிபதி ரமணாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு எழுதிய கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த கடிதத்தில் அவர் நீதிபதி ரமணா, ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமாக இருந்து கொண்டு, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது அரசை சீர்குலைக்க ஆந்திர ஐகோர்ட்டை பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தி இருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆந்திர முதல்-மந்திரியின் இந்த கடிதம், பல தரப்பிலும் கண்டனங்களுக்கு வழிவகுத்தது.

இந்த சர்ச்சைக்கு பின்னர் இப்போதுதான் நீதிபதி ரமணா, முதல் முறையாக பொதுவெளிக்கு வந்து நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்