சாலையோரம் குப்பை, மரக்கட்டைகளை எரித்தால் அபராதம் - டெல்லி அரசு அறிவிப்பு
பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளதால் சாலையோரம் குப்பை, மரக்கட்டைகளை எரித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
காற்று தரக் குறியீட்டின்படி 50 புள்ளிகள் வரை காற்று மாசு இருந்தால் ‘நல்லது'. 100 புள்ளிகள் வரை இருந்தால் ‘திருப்தி'. 200 புள்ளிகள் வரை இருந்தால் ‘மிதமானது'. 300 புள்ளிகள் வரை இருந் தால் ‘மோசம்'. 400 புள்ளிகள் வரை ‘மிகவும் மோசம்'. 500 புள்ளிகள் வரை இருந்தால் ‘ஆபத்தானது'. 500 புள்ளிகளுக்கு மேல் சென்றால் ‘அவசர நிலைக்கு' ஒப்பானதாகும்.
இந்நிலையில் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளதால் சாலையோரம் குப்பை, மரக்கட்டைகளை எரித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
மேலும் வரவிருக்கும் குளிர்காலத்தை கருத்தில் கொண்டு டெல்லியில் இன்று முதல் அவசர தேவைகளை தவிர பிற பயன்பாட்டுக்கு ஜெனரேட்டர்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால் பெரிய கட்டுமான பணிகளுக்கும் தடை விதித்து டெல்லி மாசு கட்டுப்பாட்டு குழு அறிவித்துள்ளது.
காற்று மாசுபாடு குறித்து ராஜ்பாத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட டெல்லி வாசி ஒருவர் கூறுகையில்,
தலைநகரில் காற்று மாசுபாடு குறைந்து வருகிறது. அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் டெல்லியில் காற்று மாசு அபாய அளவைத் தாண்டியுள்ளது. இதற்கு அரசு தீர்வு காணவேண்டும் என்றார்.
காற்று மாசுபாடு தீவிரம் காரணமாக டெல்லியில் காலையில் நடைப்பயிற்சிக்கு செல்வோர் மற்றும் பணிக்குச் செல்லும் மக்கள் முக கவசம் அணிந்து சென்றனர்.