மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு: நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த முடியுமா? - மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவு மாணவர்களுக் கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த முடியுமா? என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
மருத்துவப்படிப்பில் ஓ.பி.சி. (இதர பிற்படுத்தப்பட்டோர்) பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு, அ.தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
இதில் தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் வி.கிரி, கூடுதல் தலைமை வக்கீல் பாலாஜி, ஸ்ரீனிவாசன், யோகேஷ் கண்ணா ஆகியோர் ஆஜராகி, ’தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும்’ என வாதிட்டனர்.
அப்போது நீதிபதிகள், ‘சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட கமிட்டியின் நிலை என்ன?, நடப்பு ஆண்டில் அமல்படுத்தக்கூடாது என்பதில் ஐகோர்ட்டின் உத்தரவு தெளிவாக உள்ளதே’ என்று கேட்டனர்.
இதற்கு மூத்த வக்கீல் வி.கிரி, ‘தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக் கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த முடியும்’ என வாதிட்டார்.
மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பல்பீர் சிங், ‘ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட கமிட்டியின் கூட்டத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் மருத்துவப்படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவு மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற தமிழக அரசு அதிகாரிகள் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை’ என வாதிட்டார்.
கேவியட் மனுதாரர் டி.ஜி. பாபு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட கமிட்டி இதுநாள் வரை ஒரு முடிவையும் எடுக்க முடியவில்லை. இந்த விவகாரத்தில் மாணவர்களை அலையவிட்டு மத்திய அரசும் கடந்த 2016-ம் ஆண்டு முதல் அமைதி காத்து வருகிறது. இந்த வழக்குக்கும், கமிட்டிக்கும், 50 சதவீத இடஒதுக்கீடுக்கும் குந்தகம் விளைவிக்காமல் நடப்பு ஆண்டே ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைய மத்திய அரசு மருத்துவக்கல்லூரிகளில் இருப்பதை போல 27 சதவீத இட ஒதுக்கீட்டை ஓ.பி.சி. மாணவர்களுக்கு வழங்க வேண்டும்’ என வாதிட்டார்.
இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான கவுரவ் சர்மா, ‘மருத்துவ கல்லூரிகளில் இடங்களை அதிகரித்துள்ளதால், அதையும் கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டியுள்ளது’ என வாதிட்டார்.
வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘மருத்துவ படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில், ஓ.பி.சி. மாணவர்களுக் கான 50 சதவீத இடஒதுக் கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த முடியுமா? என்பது குறித்தும், மத்திய அரசு மருத்துவ கல்லூரிகளில் இருப்பதை போல 27 சதவீத இட ஒதுக்கீட்டை ஓ.பி.சி. மாணவர்களுக்கு அளிக்க முடியுமா? என்பது குறித்தும் மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் விளக்கம் அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.