வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-10-12 23:31 GMT
புதுடெல்லி, 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு, காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே வேளாண் சட்டங்கள் அரசியல் சட்டத்திற்கு முரணானது, சட்டவிரோதமானது, செல்லாது என அறிவிக்கக்கோரி தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, ராஷ்டிரீய ஜனதாதள எம்.பி. மனோஜ்குமார் ஜா, வக்கீல் மனோகர் லால் சர்மா, சத்தீஷ்கார் கிசான் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த ராகேஷ் வைஷ்ணவ் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன. மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உள்ளிட்டோர் ஆஜராகினர்.

வக்கீல் மனோகர் லால் சர்மா வாதாடும்போது, தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, ‘எந்த காரணத்துக்காக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளர்கள்?, வேளாண் சட்டங்களால் ஏற்பட்டுள்ள பாதகங்கள் என்ன?’ என கேட்டதுடன், ‘பாதிப்புக்கு உள்ளாகும்போது மனு தாக்கல் செய்யுங்கள், இந்த மனுவை திரும்ப பெற்று கொள்ளுங்கள்’ என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சத்தீஷ்கார் கிசான் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த ராகேஷ் வைஷ்ணவ் சார்பில் ஆஜரான வக்கீல் கே.பரமேஸ்வர், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, ‘வேளாண் சட்டங்களால் எங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது?’ என கேட்டபோது, கே.பரமேஸ்வர், ‘வேளாண் விளைபொருட்களை மண்டியில் விற்பனை செய்ய வகை செய்யும் மாநில அரசு சட்டத்துக்கு எதிராக இந்த வேளாண் சட்டங்கள் அமைந்துள்ளன’ என்றார்.

அப்போது ‘உரிய ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய வேண்டியது தானே’ என நீதிபதிகள் கேட்டபோது, ‘இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டுகள் பிறப்பிக்கும் உத்தரவுகள் சிக்கலை உண்டாக்கும்’ என தெரிவித்தார்.

தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன், ‘வேளாண் சட்டங்கள் மாநில உரிமைகளில் தலையிடுவதாக உள்ளன’ என வாதிட்டார். வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘இந்த மனுக்களுக்கு மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதில் அளித்தாக வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்