இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்தது 60 லட்சம் பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்து விட்டது. இதைப்போல குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 60 லட்சத்தை தாண்டியது.

Update: 2020-10-11 23:00 GMT
புதுடெல்லி, 

அகில உலகையே புரட்டி பட்டிருக்கும் கொரோனா எனும் கண்ணுக்குத்தெரியாத வைரஸ், மக்களின் அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்து இருக்கிறது. இந்த பெருந்தொற்றின் வீரியம் கொஞ்சமும் குறையாமல் பரவி வருவதால் அரசுகளும், மருத்துவ உலகமும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன.

ஒட்டுமொத்த பூமிப்பந்திலும் எல்லையின்றி பரவி வரும் இந்த தொற்று, இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இங்கும் நாளொன்றுக்கு 70 ஆயிரத்துக்கு குறையாமல் புதிய நோயாளிகளையும், நூற்றுக்கணக்கான மரணங்களையும் பரிசளித்து செல்கிறது.

13 நாளில் 10 லட்சம் பேர்

இதில் கடைசியாக நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் நாடு முழுவதும் 74 ஆயிரத்து 383 பேர் புதிதாக கொரோனாவிடம் சிக்கி இருக்கிறார்கள். இதனால் நாட்டின் பாதிப்பு எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்து விட்டது. மொத்தம் 70 லட்சத்து 53 ஆயிரத்து 806 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இதில் கடைசி 10 லட்சம் நோயாளிகள் வெறும் 13 நாட்களில் உருவாகி இருக்கின்றனர். இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டுவதற்கு 110 நாட்கள் எடுத்துக்கொண்டது. அதேநேரம் 10 லட்சத்தை தொடுவதற்கு 59 நாட்கள் ஆனது.

பின்னர் 21 நாட்களில் 20 லட்சம் ஆக உயர்ந்தது. ஆனால் 30 லட்சத்தை தொடுவதற்கு 16 நாட்களும், 40 லட்சத்தை எட்டுவதற்கு 13 நாட்களும், 50 லட்சத்தை தொடுவதற்கு 11 நாட்களுமே எடுத்துக்கொண்டது. அடுத்த 12 நாட்களில் நாட்டின் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை எட்டியது.

கேரளாவில் அதிகரிக்கும் தொற்று

புதிதாக பாதிக்கப்பட்ட 74,383 பேரில் 80 சதவீதத்தினர் 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் அதிகபட்சமாக கேரளா, மராட்டியம் மாநிலங்கள் தலா 11 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகளை பெற்றுள்ளன. இதன் மூலம் கேரளாவில் தொற்றின் வேகம் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டு உள்ளது.

இதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு தங்கள் இன்னுயிரை இழந்தவர் எண்ணிக்கை 918 ஆகும். இதில் 84 சதவீதம் பேர் 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதிலும் அதிகபட்சமாக 308 பேர் மராட்டியர்கள் என்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 334 ஆகும். இதில் மராட்டியர்கள் மட்டுமே 40 ஆயிரத்து 40 பேர் ஆவர். இதைத்தொடர்ந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பலி எண்ணிக்கையுடன் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது.

முதலிடத்தில் நீடிப்பு

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கையும் 60 லட்சத்தை தாண்டி இருக்கிறது. அந்தவகையில் மேற்படி 24 மணி நேரத்தில் 89 ஆயிரத்து 154 பேர் குணமடைந்திருக்கின்றனர்.

இதன் மூலம் மொத்தம் 60 லட்சத்து 77 ஆயிரத்து 976 பேர் இதுவரை தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 86.17 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக குணமடைந்தவர்களில் 80 சதவீதம் நோயாளிகள் மராட்டியம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம், டெல்லி மற்றும் சத்தீஷ்கார் ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதிலும் 26 ஆயிரத்துக்கு மேற்பட்ட மராட்டியர்கள் ஒரே நாளில் குணமடைந்தனர்.

உலக அளவில் தொற்றில் இருந்து மீண்டவர்களை அதிகமாக கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. அதேநேரம் பாதிப்பில் அமெரிக்காவை தொடர்ந்து 2-ம் இடத்தில் உள்ளது.

சிகிச்சையில் 12.30 சதவீதம் பேர்

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 8 லட்சத்து 67 ஆயிரத்து 496 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இது முந்தைய நாளை விட 15 ஆயிரத்து 689 பேர் குறைவாகும். ஒட்டுமொத்த பாதிப்பில் இது 12.30 சதவீதம் ஆகும். இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 3 நாட்களாக 9 லட்சத்துக்கு குறைவாகவே நீடித்து வருகிறது.

இதற்கிடையே இந்தியாவில் நடந்து வரும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் 10 லட்சத்து 78 ஆயிரத்து 544 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இதனால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 8 கோடியே 68 லட்சத்து 77 ஆயிரத்து 242 ஆகி இருக்கிறது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்