கற்பழிப்பு நபருக்கு 'சீட்'டா? கேள்வி எழுப்பிய காங்கிரஸ் பெண் தொண்டர் மீது கட்சியினர் கடும் தாக்குதல்
கற்பழிப்பு நபருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது பற்றி கேள்வி எழுப்பிய காங்கிரஸ் பெண் தொண்டர் மீது கட்சியினர் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் தாழ்த்தப்பட்ட இன பெண் கூட்டு கற்பழிப்பு, சித்ரவதைக்கு ஆளாகி கொல்லப்பட்டார். அவரது உடல், வலுக்கட்டாயமாக இரவோடு இரவாக தகனம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் உத்தரபிரதேசம் மட்டுமின்றி, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டன. அந்தவகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர், கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக வாகனங்களில் சென்றபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதில் போலீசாருடன் ஏற்பட்ட கைகலப்பில் ராகுல் காந்தி கீழே விழுந்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தின் தியோரியா நகரில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டமொன்றில் அக்கட்சியை சேர்ந்த பெண் தொண்டர் தாரா யாதவ் என்பவர் மீது அவரது கட்சியினராலேயே தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுபற்றி அவர் கூறும்பொழுது, வரவிருக்கிற இடைத்தேர்தலில் போட்டியிட முகுந்த் பாஸ்கர் என்பவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. கற்பழிப்பு குற்றவாளியான அவருக்கு எப்படி தொகுதி வழங்கப்பட்டது? என நான் கேள்வி எழுப்பினேன்.
இதில் என் மீது கடுமையான தாக்குதல் நடந்துள்ளது. இதுபற்றி பிரியங்கா காந்திஜி நடவடிக்கை எடுப்பதற்காக நான் காத்து கொண்டிருக்கிறேன்.
ஒருபுறம், கட்சி தலைவர்கள் ஹத்ராஸ் வழக்கில் நீதி கேட்டு போராடி வருகின்றனர். மறுபுறம் கட்சியில் இருந்து, கற்பழிப்பு நபருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது ஒரு தவறான முடிவு. இதனால் நம்முடைய கட்சியின் தோற்றம் பாதிக்கப்படும் என கூறியுள்ளார்.
Congress' Tara Yadav manhandled by party workers at an event in Deoria.(10.10)
— ANI UP (@ANINewsUP) October 11, 2020
She says,“I was thrashed by party workers when I questioned party's decision to give a ticket to a rapist, Mukund Bhaskar for upcoming by-polls. Now, I'm waiting for Priyanka Gandhi ji to take action” pic.twitter.com/MYYp8k1GLX