5 போர் கப்பல்களை கட்டித்தருவதில் தாமதம் ரிலையன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து மத்திய அரசு நடவடிக்கை

இந்திய கடற்படைக்கு 5 போர் கப்பல்களை கட்டித்தருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், ரிலையன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்து விட்டது.

Update: 2020-10-10 22:26 GMT
புதுடெல்லி, 

இந்திய கடற்படைக்கு ரோந்துப்பணிக்காக 5 போர் கப்பல்களை கட்டித்தருவதற்கு குஜராத்தை சேர்ந்த ‘பிபவாவ் டிபன்ஸ் அண்ட் ஆப்ஷோர் என்ஜினீயரிங் லிமிடெட்’ நிறுவனத்துடன் முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில், மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.

ரூ.2,500 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் 2011-ம் ஆண்டு போடப்பட்டதாகும்.

ஆனால் நிகில் காந்தியால் நடத்தப்பட்ட இந்த நிறுவனம் 2015-ம் ஆண்டு, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்கு கைமாறியது. மேலும் அந்த நிறுவனத்தின் பெயரும், ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினீயரிங் என மாற்றப்பட்டது. இதன்காரணமாக இந்திய கடற்படைக்கு போர் கப்பல்களை கட்டும் ஒப்பந்தமும், பணியும் ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினீயரிங் நிறுவனம் வசம் வந்தது.

ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் போர் கப்பல் களை கட்டித்தராமல் ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினீயரிங் நிறுவனம் தாமதப்படுத்தியது. இதன் காரணமாக போர் கப்பல்களை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு 2 வாரங்களுக்கு முன் ரத்து செய்து விட்டது. ஆனாலும் அதுபற்றிய தகவல்கள் இப்போதுதான் கசிந்துள்ளன.

இதற்கிடையே ரிலையன்ஸ் குழுமம், ரூ.11 ஆயிரம் கோடி கடன்களால் தவிக்கிறது. கடன்களை தீர்ப்பதற்கான பணியில் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் ஈடுபட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், இந்திய கடற்படைக்கு கப்பல் கட்டித்தரும் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்திருப்பது, ரிலையன்ஸ் குழுமத்தின் கடன்களை தீர்க்க தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினீயரிங் நிறுவனத்தை கையகப்படுத்திக்கொள்வதற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 12 கம்பெனிகள் விருப்பம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்