மராட்டியத்தில் நாளை முதல் 5 சிறப்பு ரெயில்கள் இயக்கம் - மத்திய ரெயில்வே அறிவிப்பு

மராட்டியத்தில் நாளை முதல் 5 சிறப்பு ரெயில்களை இயக்க மத்திய ரெயில்வே முடிவு செய்துள்ளது.

Update: 2020-10-08 06:59 GMT
மும்பை,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வழக்கமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பாசஞ்சர் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது மாநிலத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் 5 சிறப்பு ரெயில்களை இயக்க மத்திய ரெயில்வே முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய ரெயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு தளர்வு காரணமாக நாளை(வெள்ளிக்கிழமை) முதல் சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் இருந்து புனே, நாக்பூர், கோண்டியா, சோலாப்பூர் ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். இதில் சி.எஸ்.எம்.டி-நாக்பூர் இடையே தூரந்தோ சிறப்பு ரெயிலும் மற்ற ரெயில் நிலையங்களுக்கு சூப்பர் பாஸ்ட் ரெயில்களும் இயங்கும்.

இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. முன்பதிவு இருக்கை உறுதி செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே சிறப்பு ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு விடுத்துள்ள வழிகாட்டுதலின்படி பயணிகள் சமூக இடைவெளி பின்பற்றுதல் வேண்டும், கண்டிப்பாக முகக்கசவம் அணியவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்