போதைப்பொருள் வழக்கு- நடிகை ரியாவுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை ஐகோர்ட்

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரியாவுக்கு மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.

Update: 2020-10-07 06:14 GMT
மும்பை,

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பையில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்தது. இந்த தற்கொலையுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரித்தபோது, சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்ரவர்த்திக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. 

இதையடுத்து நடிகை ரியாவை தீவிர விசாரணைக்கு பிறகு கடந்த மாதம் 9-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதும், காதலன் சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியதும் தெரியவந்தது. ரியாவின் தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ரியா மற்றும் அவரது தம்பி சோவிக்கின் நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்ததால், மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் இருவரது நீதிமன்ற காவலையும் வருகிற 20-ந் தேதி வரை நீட்டித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையில்,   நடிகை ரியா மற்றும் அவரது தம்பிக்கு ஜாமீன் வழங்க சிறப்பு கோர்ட்டு மறுப்பு தெரிவித்ததை அடுத்து அவர்கள் மும்பை ஐகோர்ட்டில் மனு செய்திருந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த மும்பை ஐகோர்ட், நடிகை ரியாவுக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால்,அவரது சகோதர சோவிக் ஜாமீன் மனுவை நிராகரித்தது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஊழியர்கள் திபேஷ் சாவந்த், சாமுவேல் மிரண்டா ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்