பீகார் சட்டசபை தேர்தல்: பா.ஜனதா கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு; ஐக்கிய ஜனதாதளம்-122, பா.ஜனதா-121
பீகார் சட்டசபை தேர்தலையொட்டி, பா.ஜனதா கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதாதளம் 122 தொகுதிகளிலும், பா.ஜனதா 121 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
புதுடெல்லி,
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அதன் பதவி காலம் முடிவடைவதால், 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல், வருகிற 28-ந் தேதி நடக்கிறது.
இந்த தேர்தலையொட்டி, பீகாரில் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி நீடிக்கிறது. அதே கூட்டணியில் இருந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி விலகி, தனித்து போட்டியிடுகிறது.
இந்த நிலையில், ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், முதல்-மந்திரி நிதிஷ்குமார், துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, நிதிஷ்குமார் கூறியதாவது:-
பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதாதளத்துக்கு 122 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், ஜிதன்ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்படும். பா.ஜனதாவுக்கு 121 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், முகேஷ் சானி தலைமையிலான விகாஸ் ஷீல் இன்சான் கட்சிக்கு சில தொகுதிகளை பா.ஜனதா விட்டுக்கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பீகார் மாநில பா.ஜனதா தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறுகையில், “மத்தியில் லோக் ஜனசக்தி எங்களுடன் கூட்டணியில் இருக்கிறது. மாநிலத்தை பொறுத்தவரை, நிதிஷ்குமார்தான் எங்கள் கூட்டணி தலைவர்” என்றார்.
“இந்த தேர்தலில் ஐக்கிய ஜனதாதளமோ, பா.ஜனதாவோ எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் நிதிஷ்குமார்தான் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார்” என்று துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடி கூறினார்.