இந்தியாவில் புதிதாக 74 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று; 66 லட்சத்தை கடந்த பாதிப்பு

இந்தியாவில் புதிதாக 74 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 66 லட்சத்தை கடந்துள்ளது.

Update: 2020-10-05 20:54 GMT
புதுடெல்லி,

இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தனது கொடூர கரங்களை விரித்து வரும் கொரோனா தொற்று, தொடர்ந்து புதிய நோயாளிகளை உருவாக்கி வருகிறது. இதைப்போல சுமார் ஆயிரம் என்ற வகையில் புதிய மரணங்களையும் கொடுத்து வருகிறது.

இந்த பாதிப்பு நேற்றைய 24 மணி நேரத்திலும் தொடர்ந்திருக்கிறது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், 74 ஆயிரத்து 442 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

தினமும் கணிசமான எண்ணிக்கையில் ஏற்பட்டு வரும் இத்தகைய தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. எனினும் அதிகமான பாதிப்பு தினமும் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து இதுவரை நாடு முழுவதும் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 66 லட்சத்து 23 ஆயிரத்து 815 ஆகி இருக்கிறது. தினமும் சராசரியாக நடந்து வரும் 10 லட்சத்துக்கு மேற்பட்ட பரிசோதனைகளும், இத்தகைய தொற்று அதிகரிப்புக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தொற்றுகளைப்போலவே புதிதாக நிகழ்ந்த மரணங்களும் கொரோனாவின் கொடூரத்தை உணர்த்துகின்றன. அந்தவகையில் மேற்படி 24 மணி நேரத்தில் 903 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவிடம் வீழ்ந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 685 ஆக உயர்ந்திருக்கிறது. அதேநேரம் நாட்டின் சாவு விகிதம் 1.55 என்ற மிகக்குறைந்த அளவிலேயே இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கடந்த 2 வாரங்களாக 10 லட்சத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. அந்தவகையில் தற்போதும் 9 லட்சத்து 34 ஆயிரத்து 427 பேர் மட்டுமே, அதாவது மொத்த பாதிப்பில் 14.11 சதவீதத்தினரே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 76 ஆயிரத்து 737 பேர் குணமடைந்திருந்தனர். புதிதாக பாதிக்கப்பட்டவர்களைவிட, புதிதாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும். இதுவரை கொரோனாவை வென்றவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்து 86 ஆயிரத்து 703 ஆக அதிகரித்து இருக்கிறது. இது 84.34 சதவீதம் ஆகும்.

‘பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை’ என்ற மத்திய அரசின் தாரக மந்திரத்தை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தீவிரமாக பின்பற்றி வருவதால், மேற்படி அதிக எண்ணிக்கையிலான குணமடைதல் சாத்தியமாகி வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. குறிப்பாக தொற்று பாதித்தவர்களை விரைவாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுவதால் அவர்கள் தொற்றை வென்று வருவதாகவும் கூறியுள்ளது.

புதிதாக குணமடைந்தவர்களில் 75 சதவீதம் பேர் மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், கேரளா, ஒடிசா, டெல்லி, மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஷ்கார் ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் மராட்டியத்தில் மட்டுமே 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். அடுத்ததாக கர்நாடகா, ஆந்திராவில் தலா 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீண்டனர்.

இதைப்போல சிகிச்சை பெறும் நோயாளிகளிலும் 77 சதவீதம் பேர் மராட்டியம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, அசாம், ஒடிசா, சத்தீஷ்கார் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களிலும் 78 சதவீதத்தினர் மராட்டியம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நாடு முழுவதும் நடந்து வரும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 8 கோடியை நெருங்கி விட்டது. இதில் கடைசியாக நேற்று முன்தினம் 9,89,860 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 7 கோடியே 99 லட்சத்து 82 ஆயிரத்து 394 என அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

மேலும் செய்திகள்