வேளாண் மசோதாக்கள் விவகாரம்: இடைத்தரகர்களின் முகவர்களாக செயல்படும் எதிர்க்கட்சிகள்; மத்திய மந்திரி கடும் தாக்கு
வேளாண் மசோதாக்களை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், இடைத்தரகர்களுக்கு முகவர்களாக செயல்படுகின்றன என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டினார்.
பனாஜி,
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று கோவா மாநில தலைநகர் பனாஜியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நாட்டின் உண்மைநிலை என்னவென்றால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு குறைவான வருவாய் பெறுகிறார்கள். ஆனால், நுகர்வோர் அதற்கு அதிக விலை கொடுக்கிறார்கள். அதற்கு காரணம், இடைத்தரகர்கள் விலையை உயர்த்துவதுதான். இதற்கு தீர்வு காண்பதற்காக, இடைத்தரகர்களை ஒழிக்கும் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஆனால், இந்த சட்டங்களை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், இடைத்தரகர்களுக்கே இடைத்தரகர்களாகவும், முகவர்களாகவும் செயல்படுகின்றனவோ என்று சில நேரங்களில் எனக்கு தோன்றுகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தானாகவே முடிந்து விடும். பொய்மைக்கு ஆயுள் குறைவு. ஆனால், வாய்மை என்றும் வாழும். காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பொய் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அவர்களை ஒன்று மட்டும் கேட்டுக்கொள்கிறேன். முதலில், உங்கள் தேர்தல் அறிக்கையை படித்து பாருங்கள்.
இத்தகைய வேளாண் சீர்திருத்தங்களை பற்றி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் பேசி இருக்கிறார். ஆனால், காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது.
வேளாண் விளைபொருள் சந்தைக்குழுக்கள் மூடப்படும் என்றும், கொள்முதல் நிறுத்தப்படும் என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலை நீடிக்காது என்றும் கூறுகிறார்கள். ஆனால் அனைத்தும் பொய்.
மாநிலங்களவையில், வேளாண் மசோதாக்களை நிறைவேற்றும்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடந்து கொண்ட விதம் வெட்கக்கேடானது, கண்டிக்கத்தக்கது.
நாட்டின் 60 சதவீத மக்கள், வேளாண்துறையில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் பங்களிப்பு, ஜி.டி.பி.யில் வெறும் 15 சதவீதம்தான்.
அவர்களின் பங்களிப்பை அதிகரித்து, அவர்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவே இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.