கேரளாவில் பரிதாபம்; பயிற்சி விமான விபத்தில் 2 கடற்படை அதிகாரிகள் பலி
கேரளாவில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் கடற்படை அதிகாரிகள் 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கொச்சி,
கேரள மாநிலம், கொச்சியில் அமைந்துள்ள ஐ.என்.எஸ். கருடா கடற்படை விமான நிலையத்தில் இருந்து கடற்படைக்கு சொந்தமான பயிற்சி விமானத்தில் லெப்டினன்ட் ராஜீவ் ஜா, இளநிலை அதிகாரி சுனில் குமார் ஆகிய 2 அதிகாரிகள் நேற்று காலை வழக்கமான பயிற்சிக்கு புறப்பட்டு சென்றனர்.
ஆனால் காலை 7 மணிக்கு தொப்பும்பாடி பாலம் அருகே சற்றும் எதிர்பாராத வகையில் அந்த பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ், கடற்படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து, மீட்புபணிகளை முடுக்கி விட்டனர்.
சம்பவ இடத்தில் இருந்து ராஜீவ் ஜாவும் (வயது 39), சுனில் குமாரும் (29) படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கொச்சியில் உள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எச்.எஸ். சஞ்விவனி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே அவர்கள் உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தனர்.
2 கடற்படை அதிகாரிகள், பயிற்சி விமான விபத்தில் பலியாகி இருப்பது கொச்சி கடற்படை நிலையத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்காக தெற்கு கடற்படை கட்டளை மையம், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் ஜா, உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர், திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர் என்றும் சுனில் குமார் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர், இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.