ரெயில் நிலைய உணவகங்களில் பார்சல் உணவு விற்க அனுமதி; ரெயில்வே அறிவிப்பு
ரெயில் நிலைய உணவகங்களில் பார்சல் உணவுகளை விற்பதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக ரெயில்வேயின் அங்கமான ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலை தடுப்பதற்காக நாடெங்கும் ஊரடங்கு போடப்பட்டதால் பயணிகள் ரெயில் சேவை கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டது.
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மே 12-ந் தேதி முதல் டெல்லியை, நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிற 15 ஜோடி பிரிமியம் ராஜ்தானி சிறப்பு ரெயில்களையும், ஜூன் 1-ந் தேதி முதல் 100 ஜோடி தொலைவிட ரெயில்களையும் ரெயில்வே இயக்க தொடங்கியது.
அடுத்த கட்டமாக தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிற நிலையில், வரும் 15-ந் தேதி முதல் அடுத்த மாதம் 30-ந் தேதி வரையில் பண்டிகை காலத்தையொட்டி 200 சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளதாக ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் அறிவித்துள்ளார்.
இது பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் அமைந்துள்ள உணவகங்கள், கடைகளில் சமைக்கப்பட்ட உணவுகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
இது தொடர்பான அறிவிப்பை இந்திய ரெயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் ஐ.ஆர்.சி.டி.சி. வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* செப்டம்பர் 30-ந் தேதி வரையில் 10 சதவீத உரிம கட்டணத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் அமைந்துள்ள உணவு பிளாசாக்கள், துரித உணவு பிரிவுகள், ஜன ஆஹார்கள், உணவகங்கள், வரும் 31-ந் தேதிவரை 20 உரிம கட்டணத்துடன் இயங்குவதற்கு ரெயில்வே மண்டலங்கள் அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
* சமைக்கப்பட்ட உணவுகளை பார்சல்களாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
* ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் அமைந்துள்ள உணவகங்களில், கடைகளில், ஸ்டால்களில் பயணிகள் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை.
* இப்படிப்பட்ட ஓட்டல்கள், கடைகளை நடத்துவதற்கு மார்ச் 23-ந் தேதி வரை வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் முடிந்து விட்டாலும், அவை 20 சதவீத உரிம கட்டணத்தை செலுத்தி அக்டோபர் 31-ந் தேதி வரை செயல்பட அனுமதிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.