கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு செல்ல முயற்சி: ராகுல், பிரியங்கா உள்பட 200 பேர் மீது வழக்கு
உத்தரபிரதேசத்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண்ணின் வீட்டுக்கு செல்ல முயன்ற ராகுல், பிரியங்கா உள்பட 200 பேர் மீது மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
நொய்டா,
உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான ஒரு தலித் இளம்பெண், சமீபத்தில் உயர்சாதி வாலிபர்கள் 4 பேரால் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடலையும் போலீசார் அவசர அவசரமாக தகனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவம் உத்தரபிரதேசம் மட்டுமின்றி, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமும், பரபரப்பும் நிலவி வருகிறது.
எனவே ஹத்ராஸ் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்த மாவட்ட நிர்வாகம், இளம்பெண்ணின் ஊருக்குள் நுழைய ஊடகத்தினருக்கும், அரசியல்வாதிகளுக்கும் தடை விதித்தது. தடையை மீறி ஹத்ராஸ் செல்ல முயன்ற பல்வேறு அரசியல் கட்சியினர் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அந்தவகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர், கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து உத்தரபிரதேசம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களது வாகன அணிவகுப்பை நொய்டா அருகே உத்தரபிரதேச போலீசார் தடுத்து நிறுத்தினர்.
எனினும் வாகனங்களில் இருந்து இறங்கிய ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர், ஹத்ராசுக்கு நடந்தே செல்ல முயன்றனர். ஆனால் சிறிது தூரம் சென்றதும் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் ராகுல் காந்தி கீழே விழுந்தார். பின்னர் ராகுல், பிரியங்கா உள்பட காங்கிரசார் சுமார் 200 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் சிறிது நேரத்துக்குப்பின் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ராகுல், பிரியங்கா உள்பட கைது செய்யப்பட்ட சுமார் 200 பேர் மீதும் தொற்று நோய்கள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் உத்தரபிரதேசத்தின் கவுதம்புத் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக இடைவெளி பின்பற்றாதது, முககவசம் அணியாதது என பல்வேறு குற்றங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ‘சம்பவத்தின் போது கைகலப்பில் ஈடுபட்டதாக சில காங்கிரஸ் தொண்டர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களது நடவடிக்கையால் சில பெண் போலீசாருக்கு காயம் ஏற்பட்டதுடன், ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டரின் சீருடையும் கிழிந்துள்ளது’ என்று கூறியுள்ளனர்.
கற்பழித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் வீட்டுக்கு செல்ல முயன்ற ராகுல் மற்றும் பிரியங்கா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் காங்கிரசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே ஹத்ராஸ் கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவத்தை அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ அமர்வு, தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக மாநில கூடுதல் தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி. மற்றும் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் 12-ந்தேதி ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு உள்ளது.
ஐகோர்ட்டின் இந்த நடவடிக்கையை பிரியங்கா வரவேற்று உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ அமர்வில் இருந்து ஒரு வலுவான மற்றும் பாராட்டுதற்குரிய உத்தரவு வந்துள்ளது. கற்பழித்து கொல்லப்பட்ட ஹத்ராஸ் இளம்பெண்ணுக்கு ஒட்டுமொத்த நாடும் நீதி கேட்கிறது. அவரது குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச அரசால் வழங்கப்பட்ட இருண்ட, மனிதாபிமானமற்ற மற்றும் அநியாயமான செயல்களுக்கு மத்தியில், ஐகோர்ட்டு உத்தரவு ஒரு நம்பிக்கையின் கதிராக ஒளிர்கிறது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.