நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது - டெல்லி முதல்-மந்திரி அர்விந்த் கெஜ்ரிவால்
நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது என்று டெல்லி முதல்-மந்திரி அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு , மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே தகனம் செய்ததால் சர்ச்சை எழுந்தது.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு நியாயம் வழங்கக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா, பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் திரளானோர் பங்கேற்று உ.பி. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் டெல்லி முதல்-மந்திரி அர்விந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
உ.பி. பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது. நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நாடுமுழுவதும் எதிர்பார்க்கப்படுகிறது.