வெளிநாட்டு நிதி முறைப்படுத்த மசோதா: நல்ல உள்நோக்கம் கொண்டதாக இருந்தாலும் நடைமுறையில் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு - அதிமுக எம்.பி., எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்
வெளிநாட்டு நிதி முறைப்படுத்த மசோதா நல்ல உள்நோக்கம் கொண்டதாக இருந்தாலும் நடைமுறையில் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக அதிமுக எம்.பி., எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
புதுடெல்லி,
வெளிநாட்டு நிதி முறைப்படுத்தும் சட்டம் 2010-இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்த மசோதா மக்களவையில் விவாதத்திற்கு பின் நேற்று நிறைவேற்றப்பட்டது.
குறிப்பிட்ட நபர்கள் வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதை இந்த சட்டத்திருத்தம் தடை செய்கிறது. தேர்தல் வேட்பாளர், நீதிபதி, செய்தித்தாள் ஆசிரியர், சட்டமன்ற உறுப்பினர், அரசு ஊழியர் உள்ளிட்டோர் வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதை இந்த சட்டத்திருத்தம் தடை செய்கிறது. வெளிநாட்டில் இருந்து நிதி பெறும் தனி நபரோ அல்லது அமைப்போ நிதி பெறுவதற்காக விண்ணப்பிக்கும் போது ஆதார் எண் சமர்ப்பிப்பதை இந்த சட்டத்திருத்தம் கட்டாயமாக்குகிறது. இந்த மசோதாவின் மீது பேசிய பல்வேறு கட்சி உறுப்பினர்கள், வெளிநாட்டில் இருந்து பல்வேறு அமைப்புகள் நிதி பெற்று நல்ல காரியங்களுக்காக செலவு அளித்து வருவதால், கட்டுப்பாடுகள் காரணமாக பலர் வேலையை இழக்க கூடும் என தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய், இந்த மசோதா நிதி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எதிராகவோ அல்லது நிதிகளை நிறுத்த வேண்டும் என்பதற்காகவோ கொண்டுவரப்படவில்லை என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நேற்று இந்த மசோதா நிறைவேறியது.
இந்நிலையில் மாநிலங்களைவையில் வெளிநாட்டு நிதி முறைப்படுத்த மசோதா குறித்து பேசிய அதிமுக எம்.பி., எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், “வெளிநாட்டு நிதி முறைப்படுத்த மசோதாவில் அரசின் எண்ணம் நல்ல உள்நோக்கம் கொண்டதாக இருந்தாலும் நடைமுறையில் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது என்றும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிர்வாக செலவை குறைக்கும் முடிவு என்பது தேவையற்றது என்றும் அவர் தெரிவித்தார்.