தமிழகம் உள்பட 7 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்கிறார்

கொரோனா பாதிப்பு அதிகம் கொண்ட தமிழகம் உள்ளிட்ட 7 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

Update: 2020-09-22 23:45 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்த தொற்றை வலிமையாக எதிர்கொள்வதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பல்வேறு உதவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. அந்தந்த மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டும் வருகிறது.

குறிப்பாக சுகாதார மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதில் மத்திய அரசு அதிக அக்கறை காட்டுகிறது. அந்த வகையில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகள், கொரோனா சிகிச்சை வசதிகளை தொடர்ந்து உறுதி செய்து வருகிறது.

மேலும் மாநில மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றும் டாக்டர்களின் சிகிச்சை மேலாண்மை திறனை மேம்படுத்துவதற்கும் வழிகாட்டுகிறது. இதற்காக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆன்லைன் (இ-ஐ.சி.யு) முறையில் மாநில மருத்துவமனை டாக்டர்களுக்கு தொடர்ந்து வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றனர்.

அத்துடன் கொரோனாவுக்கு எதிரான போரில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவுவதற்காக பல்வேறு துறை சார்ந்த குழுக்களும் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்கள் தனிமைப்படுத்தல், கண்காணித்தல், பரிசோதித்தல் மற்றும் வலிமையான சிகிச்சை முறைகளை உறுதி செய்து வருகின்றன.

இவ்வாறு அதிகபட்ச கவனிப்பை மேற்கொண்டபோதும் சில மாநிலங்கள் தொடர்ந்து அதிக கொரோனா பாதிப்பை கொண்டிருக்கின்றன. நாட்டின் மொத்த பாதிப்பில் கணிசமான எண்ணிக்கையை இந்த மாநிலங்களே தொடர்ந்து பெற்று வருகின்றன.

அந்த வகையில் மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம், தமிழகம், டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்கள் மொத்தமுள்ள பாதிப்பில் 65.5 சதவீதத்தினரையும், 77 சதவீத மரணங்களையும் கொண்டிருக்கின்றன. சிகிச்சை பெறும் நோயாளிகளில் 63 சதவீதத்தினரும் இந்த மாநிலத்தவர்களே ஆவர்.

எனவே இந்த மாநிலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்த 7 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) காணொலி காட்சி மூலம் (மெய்நிகர் முறையில்) ஆலோசனை மேற்கொள்கிறார். அப்போது அந்தந்த மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆய்வு செய்வார் என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்