9 மாத இடைவெளிக்குபிறகு இந்திய மண்ணில் இருந்து 2 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை நவம்பர் மாதம் ஏவ இஸ்ரோ திட்டம்

9 மாத இடைவெளிக்கு பிறகு இந்திய மண்ணில் இருந்து இஸ்ரோ வருகிற நவம்பர் மாதம், 2 பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

Update: 2020-09-21 00:46 GMT
சென்னை, 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. தற்போது ‘நானோ’ வகை உள்ளிட்ட சிறிய வகை செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்காக சிறிய வகை ராக்கெட்டுகளையும் (எஸ்.எஸ்.எல்.வி.) தயாரித்து வருகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்டில் 2 பி.ஆர்.1 என்ற செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து, இந்தியாவின் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் ஜிசாட்-30 என்ற செயற்கைகோள், பிரெஞ்சு கயானாவில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் கடந்த ஜனவரி மாதம் 17-ந்தேதி அதிகாலை 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, பூமி கண்காணிப்புக்காக ‘ஜிசாட்-1’ என்ற செயற்கைகோளை கடந்த பிப்ரவரி மாதம் இஸ்ரோ தயாரித்து இருந்தது. இதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி எப்-10 என்ற ராக்கெட் மூலம் கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவ இருந்தனர்.

ஆனால், இறுதிகட்டப் பணியான ‘கவுண்ட் டவுன்’ தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. எனவே ராக்கெட் ஏவும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் நிரப்பப்பட்ட பகுதிகளில் கசிவுகள் ஏதேனும் இருக்கிறதா? என்பதையும் விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். 

இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இஸ்ரோவிலும் பணியாளர்கள் பாதிக்கப்பட்டதால் பணிகள் முடங்கின. இதனால் ராக்கெட் ஏவும் திட்டங்கள் மற்றும் இளம் மாணவர்களுக்கான ‘யுவிகா’ என்ற விஞ்ஞான திட்டங்களும் ஒத்தி வைக்கப்பட்டன.

தற்போது 9 மாத இடைவெளிக்கு பிறகு இந்திய மண்ணில் இருந்து வருகிற நவம்பர் மாதம் பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 2 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இதற்கான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இதுதொடர்பாக ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மைய கட்டுப்பாட்டாளர் சீனிவாசுலு ரெட்டி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- பி.எஸ்.எல்.வி. சி-49, பி.எஸ்.எல்.வி. சி-50 ஆகிய 2 ராக்கெட்டுகளை விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் உள்ள அனைத்து ஊழியர்களும், நிர்வாக பிரிவில் உள்ள அனைத்து அதிகாரிகளும் அனைத்து வேலை நாட்களிலும் பணியாற்ற வேண்டும். மற்ற அனைத்து ஊழியர்களும் 50 சதவீத தொழிலாளர் வருகையை உறுதி செய்யும் பட்டியலின் அடிப்படையில் பணியாற்ற வேண்டும்.

இருந்தாலும், பணியின் தேவைகள் மற்றும் முக்கியமான தேவைகளை பூர்த்தி செய்வதில், அதிகாரிகள், 50 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களை ஈடுபடுத்தக்கூடும். பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் கொரோனா தொற்று சோதனைக்கு உட்பட்டிருந்தால், அலுவலகத்திற்கு தெரிவிக்க பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது, தகவல்களை மறைக்க முயன்றால் உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்