நாடாளுமன்ற மேலவையில் தொற்று நோய் திருத்த மசோதா 2020 நிறைவேற்றம்

நாடாளுமன்ற மேலவையில் தொற்று நோய் திருத்த மசோதா 2020 நிறைவேற்றப்பட்ட பின்னர் அவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-09-19 08:49 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.  இதில் பல்வேறு விவகாரங்களை இரு அவை உறுப்பினர்களும் எழுப்பி வருகின்றனர்.  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்த நிலையில், மேலவையில் ஹோமியோபதி மத்திய கவுன்சில் (திருத்த) மசோதா 2020, இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (திருத்த) மசோதா 2020 மற்றும் மந்திரிகளுக்கான சம்பளம் மற்றும் படிகள் (திருத்த) மசோதா 2020 உள்ளிட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு வழியே நேற்று நிறைவேற்றப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக இன்றும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.  இன்று காலை மேலவை தொடங்கிய பின்பு, மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தொற்று நோய் திருத்த மசோதா 2020க்கான தீர்மானத்தினை அவை பரிசீலனைக்காக இன்று தாக்கல் செய்துள்ளார்.  இதற்கு அவையின் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.  உறுப்பினர்கள் ஒப்புதலை தொடர்ந்து மேலவையில் இந்த திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இதன்பின்னர் அவையை நாளை காலை ஒத்தி வைக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.  இதன்படி, மேலவை நாளை காலை 9 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்