கிசான் திட்ட ஊழல்: சி.பி.ஐ. விசாரணை தேவை; காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி நாடாளுமன்றத்தில் பேச்சு
கிசான் திட்ட ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
புதுடெல்லி,
விவசாயிகளுக்கான பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி உதவி திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது என புகார் எழுந்தது. கிசான் திட்ட ஊழல் தொடர்பாக விவசாயிகள் அல்லாத 37 ஆயிரம் பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. போலி பயனாளிகளின் வங்கி கணக்கிலிருந்து ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிசான் திட்ட ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்திட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இதில், கிசான் திட்ட ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், விவசாயிகளின் கடனை கூட தள்ளுபடி செய்யாமல் அரசு விவசாயிகளை முற்றிலும் ஆக கை விட்டு விட்டது.
விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட இந்த சிறிய திட்டத்தில் கூட முறையாக நடைமுறைப்படுத்திடாமல் ஊழல் மலிந்து கிடப்பது வேதனை அளிக்கிறது. இந்த ஊழலில் அதிகாரிகள் மட்டுமே பலிகடா ஆக்கப்படுகின்றனர். ஆளும் அ.தி.மு.க.வுக்கு தெரியாமல் இந்த ஊழல் நடந்திருப்பதற்கு வாய்ப்பில்லை.
தமிழக பா.ஜ.க. பல்வேறு திட்டங்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இது எவ்விதத்திலும் ஏற்று கொள்ள கூடியதில்லை. அரசு திட்டங்கள் எவ்வித அரசியல் தலையீடுகள் இல்லாமல் தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். கிசான் திட்ட ஊழலை குறித்து உடனடியாக மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பேசினார்.