திருச்சி சிவா உள்ளிட்ட 14 பேர் எம்.பி.க்களாக மாநிலங்களவையில் பதவியேற்பு
திருச்சி சிவா உள்ளிட்ட 14 பேர் எம்.பி.க்களாக மாநிலங்களவையில் பதவியேற்று கொண்டனர்.
புதுடெல்லி,
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மாநிலங்களவை நேற்று கூடியது. கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுக்கிடையே தொடங்கிய முதல்நாள் கூட்டத்தில், தமிழகத்தில் இருந்து எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க.வை சேர்ந்த திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் தமிழில் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு சபை தலைவர் வெங்கையாநாயுடு பதவிபிரமாணம் செய்து வைத்தார். கொரோனா பரவல் காரணமாக அவர் யாருக்கும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்கவில்லை. மற்ற தலைவர்களும் புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
இதேபோல் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித்தலைவர் சிபுசோரன், உத்தரபிரதேசத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. இஸ்லாம், சத்தீஷ்காரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. புடோ தேவி நேதம், மராட்டியத்தின் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. பவுசியா கான், தெலுங்கானா மாநிலத்தின் தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி கட்சி எம்.பி.க்கள் கேசவராவ், கே.ஆர்.சுரேஷ்ரெட்டி உள்ளிட்ட 14 பேர் நேற்று மாநிலங்களவை எம்.பி.க்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் சிபுசோரன் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்.