நாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வை கண்டித்து தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வை கண்டித்து தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுடெல்லி,
கொரோனா நோய்த்தொற்று காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பப்போவதாக எதிர்க்கட்சிகள் ஏற்கனவே அறிவித்து இருந்தன. அதைப்போல நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2020 போன்றவற்றுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று மக்களவை தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியிருந்தார்.
அதன்படி நேற்று காலை கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக டி.ஆர்.பாலு தலைமையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கனிமொழி, ஆ.ராசா, வக்கீல் வில்சன் உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்திய பதாகைகளை கையில் ஏந்தியவாறு அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.