விமானத்துக்குள் பதிவு செய்யும் கருவிகள் பயன்படுத்தக்கூடாது - விமான போக்குவரத்து இயக்குனரகம் விளக்கம்

புகைப்படம், வீடியோ எடுக்கலாம் என்றும் விமானத்துக்குள் பதிவு செய்யும் கருவிகள் பயன்படுத்தக்கூடாது என்று விமான போக்குவரத்து இயக்குனரகம் விளக்கம் அளித்துள்ளது.

Update: 2020-09-14 01:21 GMT
புதுடெல்லி,

சண்டிகாரில் இருந்து சமீபத்தில் மும்பை வந்த விமானத்தில் இந்தி நடிகை கங்கனா ரணாவத் பயணம் செய்தார். அவரிடம் விமானத்துக்குள் செய்தியாளர்கள் கூட்டமாக நின்று பேட்டியெடுத்த வீடியோக்கள் வெளியாகின. இதன் மூலம் விமான பாதுகாப்பு மற்றும் கொரோனா தடுப்பு விதிகளை மீறப்பட்டு உள்ளதால் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு இண்டிகோ விமான நிறுவனத்திடம் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டி.ஜி.சி.ஏ.) அறிவுறுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து விமானத்துக்குள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கக்கூடாது என உத்தரவிட்ட டி.ஜி.சி.ஏ., மீறினால் அந்த வழித்தடத்தில் குறிப்பிட்ட விமான நிறுவனத்தின் விமானம் 2 வாரங்களுக்கு ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தது. இந்த உத்தரவுக்கு நேற்று டி.ஜி.சி.ஏ. விளக்கம் அளித்து உள்ளது. அதன்படி, விமானத்துக்குள் பயணிகள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கலாம் எனவும், இது தொடர்பாக 2004 டிசம்பர் 9-ந் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தெளிவாக கூறியுள்ளது எனவும் விளக்கம் அளித்து உள்ளது.

அதே நேரம் விமான பாதுகாப்புக்கு இடையூறு அளிக்கும் பதிவு செய்யும் கருவிகளை விமானத்துக்குள் பயன்படுத்துவதற்கு அந்த அறிக்கையில் அனுமதி அளிக்கப்படவில்லை என கூறியுள்ள டி.ஜி.சி.ஏ., இந்த கருவிகளை விமானத்துக்குள் பயன்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளது. இந்த கருவிகளால் குழப்பம், விமான இயக்கத்துக்கு தடை ஏற்படுவதாகவும் டி.ஜி.சி.ஏ. கூறியுள்ளது.

மேலும் செய்திகள்