முன்னாள் மத்திய மந்திரி ரகுவன்ஷ் பிரசாத் சிங் மறைவு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
முன்னாள் மத்திய மந்திரி ரகுவன்ஷ் பிரசாத் சிங் மூச்சுத் திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.
புதுடெல்லி,
முன்னாள் மத்திய மந்திரியான ரகுவன்ஷ் பிரசாத் சிங் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பாட்னாவிற்கு எடுத்துவரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.
ரகுவன்ஷ் பிரசாத் சிங் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு பாட்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரகுவன்ஷ் பிரசாத் சிங்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக லாலு பிரசாத் யாதவுடன் மிகவும் நெருக்கமான தலைவராக இருந்த ரகுவன்ஷ் பிரசாத் சிங், சமீபத்தில் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு செல்லவிருப்பதாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில்தான் அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.