லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை: இந்தியா-சீனா 5 அம்ச திட்டம்; வெளியுறவு மந்திரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
இந்திய-சீன வெளியுறவு மந்திரிகள் இடையே மாஸ்கோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க 5 அம்ச திட்டத்தை நிறைவேற்றுவது என்று உடன்பாடு ஏற்பட்டது.
புதுடெல்லி,
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லை பிரச்சினை சமீப காலமாக விசுவரூபம் எடுத்து வருகிறது.
லடாக்கில் கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி சீன துருப்புகள் பயங்கரமான ஆயுதங்களுடன் வந்து அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடி தாக்குதலில் சீன தரப்பில் 35 பேர் பலி ஆனார்கள்.
பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு பின்னர் லடாக்கில் இரு தரப்பு மோதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. ஒரு பக்கம் அரசியல், ராணுவம், ராஜதந்திர ரீதியில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினாலும், சீனா தொடர்ந்து அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் படை குவிப்பில் ஈடுபட்டு உள்ளது. இந்தியாவும் பதிலடி கொடுக்க ஏதுவாக எல்லையில் தன் பலத்தை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு போர்ப்பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காகமத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்று உள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்க மாஸ்கோ வந்துள்ள சீன வெளியுறவு மந்திரி வாங் யியை அவர் நேற்று முன்தினம் மாலையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு 2½ மணி நேரம் நீடித்தது. பேச்சுவார்த்தை விவரங்கள் நேற்று வெளியாயின.
இந்த சந்திப்பின்போது, எல்லையில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனா படைகளை குவித்து இருப்பதற்கு வாங் யியிடம் இந்தியாவின் கடும் எதிர்ப்பை ஜெய்சங்கர் தெரிவித்தார். படை குவிப்பு நடவடிக்கை, 1993 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தங்களுக்கு எதிரானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பிரச்சினைக்குரிய இடங்களில் சீன தரப்பின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள், இரு தரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளுக்குஎதிரானது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவை பொறுத்தமட்டில், எல்லைப்பகுதிகளை நிர்வகிப்பதில் அனைத்து ஒப்பந்தங்களையும் முழுமையாக பின்பற்ற வேண்டும் என எதிர்பார்ப்பதாக கூறியதோடு, ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றுவதற்கான எந்தவொரு முயற்சியிலும் சீனா ஈடுபடக்கூடாது என்றும் ஜெய்சங்கர் கேட்டுக்கொண்டார். இந்திய படைகள் அனைத்து ஒப்பந்தங்களையும், நெறிமுறைகளையும் துல்லியமாக பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இரு தரப்பு உறவை மேம்படுத்துவதற்கு எல்லைப்பகுதியில் அமைதியையும், சமாதானத்தையும் பேணுவது அவசியம் என்பதை சீன வெளியுறவு மந்திரி வாங் யியிடம் சுட்டிக்காட்டிய ஜெய்சங்கர், கிழக்கு லடாக்கில் சமீபத்தில் அரங்கேறிய சம்பவங்கள், தவிர்க்க முடியாமல் இரு தரப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.
எனவே தற்போதைய சூழ்நிலையில் இரு நாடுகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு எல்லை பிரச்சினைக்கு அவசர தீர்வு காணும் வகையில், பிரச்சினைக்குரிய அனைத்து பகுதிகளில் இருந்தும் படைகளை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்றும், எதிர்காலத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க வேண்டியது அவசியம் எனவும் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
இரு தரப்பு படைகளையும் தங்கள் நிரந்தர இடங்களுக்கு படிப்படியாக அனுப்பும் செயல்முறையை இரு தரப்பு தளபதிகள் இணைந்து செயல்படுத்துவது என இரு தரப்பும் முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இரு தரப்பு சார்பில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் 5 அம்சங்கள் அடங்கிய திட்டம் ஒன்றை செயல்படுத்த ஒப்புக்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
* எல்லையில் தற்போதைய நிலைமை இரு தரப்பு நலனுக்கு ஏற்றதாக இல்லை. எனவே இரு தரப்பு எல்லை படையினரையும் விரைவாக விலகிக்கொள்ளவும், பேச்சுவார்த்தையை தொடரவும். சரியான இடைவெளியை பராமரிக்கவும், பதற்றத்தை தணிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
* இந்திய-சீன உறவுகளை வளர்ப்பதில் இரு நாடுகளின் தலைவர்கள் இடையே ஏற்பட்ட ஒருமித்த கருத்துகளின் வழிகாட்டுதல்களை எடுத்துக்கொள்ள வேண்டும். கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாற்ற அனுமதிக்கக்கூடாது.
* இந்திய-சீன எல்லைவிவகாரத்தில் தற்போதுள்ள அனைத்து ஒப்பந்தங்கள், நெறிமுறைகளுக்கு கட்டுப்படுவது என்றும், அமைதியையும், சமாதானத்தையும் பேணுவது என்றும், பதற்றத்தை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும் என்றும் இரு தரப்பு மந்திரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஒப்புக்கொள்ளப்பட்டது.
* எல்லை பிரச்சினையில், சிறப்பு பிரதிநிதி செயல்முறை மூலம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதோடு, தொடர்புகள் வைத்துக்கொள்ள வேண்டும்.
* இந்திய-சீன எல்லை விவகாரங்களில் ஆலோசனைமற்றும் ஒருங்கிணைப்புக்கான பணி செயல்முறைகளும், அதன் கூட்டங்களும் தொடர வேண்டும். மேற்கண்டஅம்சங்கள் அதில் இடம்பெற்று உள்ளன.
லடாக் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில், 5 அம்ச திட்டத்தை செயல்படுத்த இந்தியா-சீனா இடையே உடன்பாடு ஏற்பட்டு இருப்பதை ரஷியா மகிழ்ச்சியுடன் வரவேற்று உள்ளது.
இதுபற்றி ரஷிய வெளியுறவு மந்திரி லாவ்ரோவ் கூறுகையில், “மிகவும் பயனுள்ள இந்த சந்திப்பை நடத்த மாஸ்கோவில் ஏற்பாடு செய்தது குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லை பிரச்சினையில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதே இதன் குறிக்கோள் ஆகும். இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கும், சீன வெளியுறவு மந்திரி வாங் யிக்கும் இடையே நடந்திருப்பது மிகச்சிறந்த சந்திப்பு. அது நடந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்தார்.