நாடு முழுவதும் 96 ஆயிரம் பேருக்கு தொற்று: இந்தியாவில் கொரோனா பாதிப்பில் உச்சம் தொட்ட 5 மாநிலங்கள்

இந்தியாவில் ஒரே நாளில் 96 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டு உச்சம் பெற்றிருக்கும் நிலையில், நாடு முழுவதும் அதிக பாதிப்பை பெற்றுள்ள 5 மாநிலங்கள், குணமடைந்தோர் எண்ணிக்கையிலும் சாதனை படைத்துள்ளன.

Update: 2020-09-11 22:37 GMT
புதுடெல்லி,

இந்தியாவை தொடர்ந்து நிலைகுலையச் செய்து வரும் கொரோனா வைரஸ், உலக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 2-வது இடத்தில் நீடிக்கச் செய்திருக்கிறது. தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது.

அந்தவகையில் நேற்று முன்தினம் காலை வரையிலான 24 மணி நேரத்தில் 95 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை வழங்கிய கொரோனா நேற்றும், அதற்கு மேலான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முவதும் 96 ஆயிரத்து 551 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 லட்சத்து 62 ஆயிரத்து 414 ஆக உயர்ந்து விட்டது. இந்தியா கடந்த 5-ந்தேதிதான் 40 லட்சம் கொரோனா நோயாளிகள் என்ற எண்ணிக்கையை தொட்டிருந்தது. அடுத்த ஒரு வாரத்துக்குள் 5 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது மட்டுமின்றி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பலி எண்ணிக்கையும் 1,209 ஆக அதிகரித்து இருந்தது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனா பலி கொண்ட உயிர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 271 ஆகி விட்டது. அதேநேரம் நாட்டின் சாவு விகிதம் 1.67 சதவீதம் என்ற நிலைக்கு சரிந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பலி எண்ணிக்கையில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 495 பேர் இறந்துள்ளனர். அடுத்ததாக கர்நாடகா (129), உத்தரபிரதேசம் (94), பஞ்சாப் (88), ஆந்திரா (68), தமிழ்நாடு (65), மேற்கு வங்காளம் (41), டெல்லி (28), அரியானா (25), மத்திய பிரதேசம் (21), அசாம் (18), சத்தீஷ்கார் (16), குஜராத் (15), ராஜஸ்தான் (14), காஷ்மீர் மற்றும் தெலுங்கானா தலா 13, கேரளா (12) என பல மாநிலங்கள் கணிசமான உயிர்களை பறிகொடுத்துள்ளன.

மொத்த சாவு எண்ணிக்கையிலும் மராட்டியம் 28,282 பேரை பறிகொடுத்து முன்னிலையில் இருக்கிறது. இதைத்தவிர தமிழ்நாடு (8,154), கர்நாடகா (6,937), ஆந்திரா (4,702), டெல்லி (4,666), உத்தரபிரதேசம் (4,206), மேற்கு வங்காளம் (3,771), குஜராத் (3,164), பஞ்சாப் (2,149), மத்திய பிரதேசம் (1,661), ராஜஸ்தான் (1,192) போன்ற மாநிலங்களும் அதிக உயிர்களை கொரோனாவிடம் இழந்துள்ளன.

நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை 5.40 கோடியை எட்டியுள்ளது. குறிப்பாக நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட 11,63,542 பரிசோதனைகளையும் சேர்த்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 5 கோடியே 40 லட்சத்து 97 ஆயிரத்து 975 என்ற நிலையை எட்டியுள்ளது. இதற்கிடையே இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 70,880 பேர் கொரோனாவை வென்றுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 42 ஆயிரத்து 663 ஆக அதிகரித்து உள்ளது. இதன் மூலம் தொற்றில் இருந்து மீண்டவர் விகிதமும் 77.65 ஆக அதிகரித்து இருக்கிறது. தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 9,43,480 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க நாட்டில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கையை அதிகம் கொண்ட மாநிலங்களாக மராட்டியம், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அந்தவகையில் புதிதாக பாதிக்கப்பட்ட 96,551 பேரில் சுமார் 57 சதவீதம் பேர் இந்த 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் மராட்டியம் மற்றும் ஆந்திராவில் மட்டுமே முறையே 23,000 மற்றும் 10,000-க்கும் மேற்பட்டோர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

மேலும் குணமடைந்த 70 ஆயிரத்து 880 பேரில் சுமார் 60 சதவீதத்தினர் இந்த மாநிலங்களிலேயே உள்ளனர். அதிலும் மராட்டியத்தில் 14 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், ஆந்திராவில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் தொற்றில் இருந்து மீண்டு சாதித்துள்ளனர்.

தற்போது சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையில் 74 சதவீதத்தை மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, தெலுங்கானா, அசாம், ஒடிசா மற்றும் சத்தீஷ்கார் ஆகிய 9 மாநிலங்கள் பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்கள் மட்டுமே 48 சதவீதத்துக்கும் அதிகமான நோயாளிகளை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்