மெரினாவில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

மெரினா கடற்கரை பகுதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-09-11 07:01 GMT
புதுடெல்லி,

சென்னை மெரினா கடற்கரையில் பெருமளவில் நுரை ததும்பி கிடப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்து, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் கூட்டுக்குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த கூட்டுக்குழு ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தது. இதில் மெரினா கடற்கரை பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் நுரைத்தன்மை காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், எஸ்.பி.வாங்டி, டாக்டர் நகின் நந்தா ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் ராம் சங்கர் ஆஜரானார். விசாரணை முடிவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்ற அமைப்புகளுடன் இணைந்து மெரினா கடற்கரை பகுதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்