சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம்- யு.பி.எஸ்.சி. அறிவிப்பு

வருகிற அக்டோபர் 4-ந்தேதி நடக்கும் சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு எழுதுபவர்கள், சொந்த சானிடைசருடன் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று யு.பி.எஸ்.சி. அறிவித்து உள்ளது.

Update: 2020-09-11 00:47 GMT
புதுடெல்லி, 

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வு ஆண்டுதோறும் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் என 3 கட்டங்களாக நடத்தப்படும். இதில் இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு வருகிற அக்டோபர் 4-ந்தேதி நடத்தப்பட உள்ளது.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்த தேர்வு எழுதுபவர்களுக்கு கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட உள்ளன. இதுபற்றி மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்த தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் (மாஸ்க்) அணிய வேண்டும். அப்படி அணியாமல் வருபவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அத்துடன் சொந்தமாக சானிடைசர் கொண்டுவர வேண்டும். அது ஒளி ஊடுருவும் பாட்டில்களில் இருக்க வேண்டும். தேர்வறையில் சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும். தனிநபர் சுகாதார நடவடிக்கைகளையும் கண்ணியமாக கடைபிடிக்க வேண்டும்.

இந்த வருடம் முதல்நிலைத்தேர்வு கடந்த மே 31-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடுதழுவிய ஊரடங்கு விதிக்கப்பட்டதால் அந்த நாளில் திட்டமிட்டபடி தேர்வு நடத்த முடியாமல் ஒத்திவைக்கப்பட்டது. தள்ளிவைக்கப்பட்ட அந்த தேர்வு வரும் அக்டோபர் 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.

இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை விண்ணப்பதாரர்கள் யு.பி.எஸ்.சி. இணையதளம் வழியாக (http://upsconline.nic.in). பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த வருடம் காகித ஹால் டிக்கெட் இல்லாமல் ‘இ-அட்மிட் கார்டு’ முறை பின்பற்றப்படுகிறது. இந்த இ-அட்மிட் கார்டானது தேர்வு தொடங்கும் 10 நிமிடம் முன்பாக வருகையை பதிவு செய்து செயல்பாட்டை நிறுத்திக் கொண்டுவிடும். 

எனவே தேர்வு அன்று காலை 9.20 மணிக்குள் விண்ணப்பதாரார் அட்மிட் கார்டுடன் தேர்வறைக்குள் சென்றுவிட வேண்டும். பிற்பகல் 2.20 மணிக்கு பின்பு அவர் வெளியேறலாம். விண்ணப்பதாரர் பதிவு செய்த புகைப்பட அடையாள அட்டையையும் எடுத்து செல்ல வேண்டும். செல்போன், ஸ்மார்ட்வாட்ச், பென்டிரைவ், கேமரா, புளூடூத், கால்குலேட்டர் போன்ற கருவிகள் தேர்வறைக்குள் கொண்டு செல்லக்கூடாது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்