சிவசேனா மிரட்டலை மீறி மும்பை திரும்பினார் நடிகை கங்கனா ரணாவத்
நடிகை கங்கனா ரணாவத்தின் பங்களா வீட்டின் சட்டவிரோத கட்டுமான பகுதிகளை மும்பை மாநகராட்சி இடித்தது. இதற்கிடையே சிவசேனாவின் மிரட்டலை மீறி கங்கனா மும்பை திரும்பினார்.
மும்பை,
இந்தி திரையுலகில் இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை விசாரித்த விதம் குறித்து மராட்டிய அரசு மற்றும் மும்பை போலீசார் மீது பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இந்தி திரையுலகத்தில் போதைப்பொருள் பழக்கம் நிலவுவதாகவும் பகிரங்கமாக கூறினார்.
மேலும் மும்பை பாதுகாப்பற்ற நகரமாக இருப்பதாக கூறிய நடிகை கங்கனா, மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், சினிமாவில் வரும் மாபியாக்களை விட மும்பை போலீசாரை பார்த்து பயப்படுவதாகவும் சர்ச்சை கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். சொந்த ஊரான இமாசலபிரதேச மாநிலம் மணாலியில் இருந்தபடி மும்பை நகர் மற்றும் மும்பை போலீசாரை பற்றி குறை கூறிய நடிகை கங்கனாவுக்கு ஆளும் கட்சியான சிவசேனா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணர்ந்தால், இங்கே வராதீர்கள் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எச்சரிக்கை விடுக்க, 9-ந் தேதி (நேற்று) மும்பை திரும்புவேன் முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று கங்கனா சவால் விடுத்தார்.
இந்த மோதலை அடுத்து மும்பை பாந்திரா பாலிஹில் பகுதியில் உள்ள நடிகை கங்கனா பங்களா வீட்டில் சட்டவிரோதமாக புதுப்பிப்பு பணிகள் நடந்து இருப்பதாக நேற்று முன்தினம் காலை மும்பை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது. 24 மணி நேரத்தில் பதிலளிக்க கெடுவும் விதித்தது. அதன்படி கங்கனா பதிலளிக்கவில்லை என்பதால், மும்பை மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் நேற்று காலை கங்கனாவின் பங்களா வீட்டுக்கு சென்றனர். அங்கு சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்படுவது தொடர்பாக நோட்டீஸ் ஒட்டினர்.
உடனடியாக பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டது. அவரது பங்களாவில் மாநகராட்சியின் அனுமதியின்றி புதுப்பித்து கட்டப்பட்ட பகுதிகளை இடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே நடிகை கங்கனா மும்பை ஐகோர்ட்டில் தனது பங்களா வீட்டில் இடிப்பு பணியை மேற்கொள்ள தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஒருபுறம் மாநகராட்சி இடிப்பு பணியை மேற்கொண்டு இருந்த நிலையில், இந்த மனு நீதிபதி கதாவாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி மேற்கொள்ளும் இடிப்பு பணிக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வீட்டில் அதன் உரிமையாளர் இல்லாதபோது, எப்போது உள்ளே சென்று இடிப்பு பணியில் ஈடுபடலாம் என்று மும்பை மாநகராட்சிக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
கங்கனாவின் மனு மீது மும்பை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை இன்றைக்கு (வியாழக்கிழமை) தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
மும்பையில் உள்ள பங்களா வீட்டில் மாநகராட்சி இடிப்பு பணியை செய்து கொண்டு இருந்த நிலையிலும், சிவசேனாவின் மிரட்டலுக்கு மத்தியிலும் நடிகை கங்கனா தனது சொந்த ஊரில் இருந்து மும்பை திரும்பினார். பிற்பகலில் அவர் மும்பை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிவசேனாவினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் இந்திய குடியரசு கட்சி (ஏ) தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோளை ஏற்று அக்கட்சியினர் விமான நிலையத்தில் அவருக்கு பாதுகாப்பு கொடுத்தனர்.
சிவசேனா மிரட்டலை தொடர்ந்து நடிகை கங்கனாவுக்கு ’ஒய் பிளஸ்‘ பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியிருந்தது. அதன்படி ஆயுதம் தாங்கிய கமாண்டோ வீரர்கள் கங்கனாவை பாதுகாப்பு வளையம் அமைத்து மும்பைக்கு அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மும்பை மாநகராட்சியின் பங்களா இடிப்பு நடவடிக்கைக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது. அந்த கட்சியின் முன்னாள் மந்திரியும், எம்.எல்.ஏ.வுமான ஆசிஷ் செலார் கூறியதாவது:-
பழிவாங்கும் நடவடிக்கையாக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்றால், கடந்த ஆண்டு கட்டுமானத்தின்போது மாநகராட்சி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. நீங்கள் ஆளும் கட்சியுடன் நின்றால் காப்பாற்றப்படுவீர்கள். அப்படி இல்லை என்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுதான் அவர்களின் அணுகுமுறை. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பழிவாங்கும் அரசியலை விளையாடுகிறது.
கங்கனா ரணாவத்தின் கருத்தை நாங்கள் ஏற்கவில்லை. ஆனால், மும்பைக்கு வரும் நபரின் வாழ்க்கை மற்றும் சொத்துகளை பாதுகாப்பது அரசின் கடமை என்று நாங்கள் கருதுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.