நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து அந்த மனுக்கள தள்ளுபடி செய்தது.

Update: 2020-09-09 08:26 GMT
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவல் இன்னும் நாடு முழுவதும் குறையாத நிலையில், சில மாநிலங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஒத்திவைக்க வேண்டும் எனவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண், நீதிபதிகள் ஆர்எஸ் ரெட்டி, எம்ஆர் ஷா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாதர், “பிஹாரில் மழை வெள்ளத்தால் சூழல் மோசமாக இருக்கிறது. இதில் கொரோனா பரவலும் அதிகரித்து வருகிறது. பாட்னா, கயா இரு இடங்களில் மட்டும் நீட் தேர்வு மையங்கள் இருப்பதால், சில வாரங்களுக்குத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மற்றொரு மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.டிஎஸ் துளசி, “கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. பின் எவ்வாறு அவர்களின் குழந்தைகள் நீட் தேர்வை எழுத முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.

மனுதாரர்கள் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், “நீட் தேர்வுகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் நடத்தும் நிர்வாகிகள் செய்துவிட்டார்கள். ஏற்கெனவே ஜே.இ.இ. தேர்வுகள் நடந்து முடிந்துவிட்டன. இனி நீட் தேர்வு மட்டும்தான் இருக்கிறது. அனைத்தும் முடிந்துவிட்டன. மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணையும் கூட முடிந்துவிட்டது. ஆதலால், இந்த மனுக்களை விசாரிக்க முடியாது. தள்ளுபடி செய்கிறோம்” என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே, 6 மாநிலங்களைச் சேர்ந்த கல்வி அமைச்சர்கள் சார்பில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கடந்த 4-ம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்