என்.சி.பியால் கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

என்.சி.பியால் கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-09-08 17:32 GMT
மும்பை,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகரின் மரணம் குறித்து அவரது தந்தை கே.கே.சிங் பீகார் போலீசில் அளித்த புகாரை தொடர்ந்து, தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய 3 முகமைகள் விசாரணை நடத்தி வருகின்றன.

போதைப்பொருள் பயன்படுத்தியது, வாங்கியது, விற்றது தொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தியின் தம்பி சோவிக், நடிகர் சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து 2வது நாளாக நேற்று காலை 9.30 மணியளவில் நடிகை ரியா பல்லர்டு எஸ்டேட்டில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அங்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரியாவிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு நடிகை ரியாவிடம் விசாரணை நடத்த கூடும் என கூறப்பட்டன.

இந்நிலையில், நடிகை ரியா சக்ரபோர்த்தி போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் மும்பையில் இன்று கைது செய்யப்பட்டார். இதன்பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து தற்போது என்.சி.பியால் கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவரது ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

மேலும் செய்திகள்